Published : 02 Aug 2018 01:02 PM
Last Updated : 02 Aug 2018 01:02 PM
கேரளாவில் மீன் விற்பனை செய்தபடி, கல்லூரியில் படித்து வரும் மாணவி ஹனனை, மாநில காதி வாரியத்தின் பக்ரீத், ஓணம் விற்பனைக்கான நிகழ்ச்சியில் விளம்பரத் தூதராக நியமிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மலையாளத் திரைப்பட இயக்குநர்கள் இருவர் மாணவி ஹனனுக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம்பெண் ஹனன் (21 வயது). இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்த மீன் விற்பனையின் மூலம்தான் ஹனன் தனது படிப்பையும், தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார். ஹனன் குறித்து கடந்த வாரம் மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மலையாள திரை நட்சத்திரங்களும் அவரைப் பாராட்டி, உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.
ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனனின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். அவரின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் ஹனனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று கூறி கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது. நெட்டிசன்கள் தொடர்ந்து ஹனனைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஃபேஸ்புக்கில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆதரவு தெரிவித்து, ஹனனுக்கு கேரள அரசு துணையிருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து நேற்று மாணவி ஹனன் நன்றி தெரிவித்தார். அப்போது, துணிச்சலாக இருங்கள் தேவையான உதவிகளைக் கேரள அரசு செய்யும் என்று உறுதியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஹனனுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கனக்காகுன்னு அரண்மனையில் ஓணம்-பக்ரீத் காதி விற்பனை தொடக்கவிழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் பினராயி விஜயன், தொழில்துறை அமைச்சர் மொய்தீன், காதி வாரியத் தலைவர் ஷோபனா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் மாணவி ஹனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுக் காதி வாரியத்தின் ஆடைகளை அணிந்து ஃபேஷன் ஷோவில் பங்கேற்றார்.
தொடக்க நிகழ்ச்சியின் போது, முதல்வர் பினராயி விஜயனுக்கு அருகே ஹனனுக்கு இருக்கை போடப்பட்டு இருந்தது. ஆனால், அதில் அமர ஹனன் மறுத்துவிட்டார். ஆனால், முதல்வர் பினராயி விஜயன் ஹனனை அழைத்து அருகே அமரவைத்தார்.
அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் மாணவி ஹனனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறிய நினைவுப் பரிசை வழங்கி, தொடர்ந்து துணிச்சலும் வாழ்க்கையில் எதிர்நீச்சலும் போட வேண்டும், முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின், கேரள காதி வாரியத்தின் தலைவர் ஷோபனா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''இந்த ஆண்டு ஓணம்-பக்தீர்த காதி விற்பனைக்கு விளம்பரத் தூதராக ஹனனை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் மத்தியில் ஹனனின் பெயர் நன்கு பிரபலமடைந்துவிட்டது. விரைவில் இது தொடர்பாக முடிவு செய்வோம். ஆனால், நிரந்தரமாக விளம்பரத்தூதராக நியமிக்கும் திட்டம் ஏதும் இல்லை'' எனத் தெரிவித்தார்.
அரண்மனையில் நடந்த ஃபேஷன் ஷோவில் மாணவி ஹனன் பாரம்பரிய கேரள ஆடைகளை உடுத்தி, நடந்து வந்தார். அவரை அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT