Published : 02 Aug 2014 10:25 AM
Last Updated : 02 Aug 2014 10:25 AM
தமிழகத்தின் அம்மா உணவகத்தை போன்று ஆந்திர மாநிலத்தில் என்.டி.ஆர். உணவகம் தொடங்குவதற்கு அம்மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு, மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை ஆந்திராவிலும் அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டது.
இது தொடர்பாக அம்மாநில பொது விநியோகத்துறை அமைச்சர் பரிடால சுனிதா தலைமையிலான குழு சமீபத்தில் தமிழகம் வந்து இத்திட்டத்தை நேரில் ஆய்வு செய்தது. இக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் ஹைதராபாத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி. ரகுநாத ரெட்டி கூறியதாவது:
தமிழகத்தை போன்று ஆந்திரா விலும் குறைந்த விலைக்கு உணவு வழங்க தீர்மானம் நிறைவெற்றப்பட்டது. என்.டி.ஆர். கேண்டீன் என்ற பெயரில், சோதனை அடிப்படையில் முதலில் 3 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக துணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தி முதல், மாநிலம் முழுவதும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இதேபோன்று விவசாயத்துக்கு 7 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
ஏரி, ஆறுகளில் மணல் அள்ளுவதில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 25 சதவீத வாய்ப்பு வழங்கப்படும். 6 முதல் 14 வயது வரையிலான அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்.
வரும் ஆண்டுகளில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக ஆந்திரம் திகழும். மாநிலம் முழுவதும் ஏழைகளுக்காக குறைந்த விலை மருந்து கடைகள் அமைக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT