Published : 27 Aug 2018 09:15 PM
Last Updated : 27 Aug 2018 09:15 PM
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 70 குழந்தைதள் இறந்த விவகாரத்தில் முதல்வர் ஆதித்யநாத் அரசியல் செய்கிறார், மக்களைத் திசை திருப்புகிறார் என்று டாக்டர் கபீல்கான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக்கொடுத்து ஏராளமான குழந்தைகளை டாக்டர் கபீல் கான் காப்பாற்றி, அப்பகுதி மக்களின் பாராட்டுக்குரியவரானார் ஆனால், கவனக்குறைவால் கபீல்கான் செயல்பட்டதாகக்கூறி உ.பி அரசு அவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்தன.
இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நிலுவை தொகையை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியது.
இந்நிலையில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற குழந்தைகள் பிரிவில் பணியாற்றிய டாக்டர் கபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். இந்தச் செயலுக்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். டாக்டர் கபீல் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் குழந்தைகள் நலப்பிரிவு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், குழந்தைகள் இறந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. .
இதையடுத்து, குழந்தைகள் இறந்தபோது, பணியில் இருந்த டாக்டர் கபீல் கான் உள்ளிட்ட 9 பேரை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கைது செய்ய உத்தரவிட்டது. அதன்பின் 8 மாதங்கள் சிறைக்கு பின் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் லக்னோவில் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து முதல்வர் ஆதித்யநாத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறுகையில், குழந்தைகள் இறந்த விவகாரம் எனக்குத் தெரிந்தவுடன் நான் உடனடியாக சுகாதாரத்துறை இயக்குநர், சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவக்கல்வி அமைச்சர் ஆகியோரை மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டு எனக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட்டேன்.
மறுநாள் நான் மருத்துவமனைக்கும் சென்றேன். அங்கு சென்றபின்புதான் , ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து நான் விசாரணை நடத்தியதில், கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் மருத்துவர்களுக்குள் நடந்த பூசல்தான்காரணம். மருத்துவர்கள் கையாண்ட விதம் தவறாக இருந்தது. குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளை அழற்சி குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தேன். அது மருத்துவர்கள் கையில்தான் இருந்தது அதை அவர்கள் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத்தின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்து டாக்டர் கபீல்கான் டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஆதித்யநாத் பேசுவது அனைத்தும் தவறானது. குழந்தைகள் பிரிவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம், கடிதம் எழுதி, தங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையை செலுத்தக்கோரிக் கேட்டிருந்தார். அதைச் செலுத்தினால்தான் ஆக்சிஜன் சப்ளை செய்யமுடியும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பணத்தை செலுத்தவில்லை.
அதேபோல பச்சிளங்குழந்தைகள் யாரும் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படவில்லை. ஏராளமான குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல்தான் இறந்தனர். ஆனால் முதல்வர் ஆதித்யநாத் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார், மக்களை திசைதிருப்ப பொய்களை சொல்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT