Published : 21 Aug 2018 08:43 AM
Last Updated : 21 Aug 2018 08:43 AM

கேரளாவில் இயற்கையின் வதம்… வீழ்ந்தது மதம்… சுடர் விடும் மனிதம்!

கனமழையினால் கடும்பாதிப்புக்கு உள்ளாகியது கேரளம். மதங்களைக் கடந்த மனிதத்தால் கேரளம் இப்போது மெல்ல உயிர்பெற்றுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கும், இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கும் சகோதரத்துவத்தோடு பரஸ்பரம் களத்தில் நின்று உதவிக் கொள்கின்றனர். இதேபோல் இந்து ஒருவரின் ஈமச்சடங்கை கிறிஸ்தவர்கள் முன்னின்று நடத்தியுள்ளனர்.

கேரளத்திற்கு பருவம் தவறால் கிடைக்கும் தென்மேற்கு  பருவமழையின் காலஅளவு 4 மாதங்கள். அப்போது பெய்யும் மொத்த மழையை விட, கடந்த ஜூனில் இருந்து இதுவரை இரண்டரை மாதத்தில் மட்டும் 37 சதவிகிதம் கூடுதல் மழை பெய்தது. இதனால் மொத்த கேரளமும் நீர் சூழ்ந்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. கனமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடு, உடமைகளை இழந்துள்ளனர். லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் முகாம்களில் தங்கியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்!

கேரளத்தில் மழை, வெள்ளப் பாதிப்பு குறித்து தகவல் அறிந்ததுமே களத்தில் இறங்கினர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த மலையாள திரைப்பட நடிகர் பிரித்விராஜின் தாயார், மல்லிகா சுகுமாறனை ‘வார்ப்பு’ போன்ற பாத்திரத்தில் வைத்து, நூறு அடி வரை சுமந்து வந்து காரில் ஏற்றி விட்டனர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். இப்படி அவர்கள் மீட்டவர்கள் அதிகம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், அரிசி, கம்பளி, போர்வை போன்ற தற்போதைய தேவைகள் அனைத்தையும் முகாம்

களுக்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வழங்குகின்றனர். அதேபோல் இவர்கள் பல பகுதிகளிலும் நீரில் நீந்தியும், போராடியும் பலரை மீட்டனர்.

இதுகுறித்து கேரள மாநில ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சந்தோஷ் கூறும்போது, ‘’கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி மூலம் மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் முகாம் அமைத்துள்ளோம். இந்தியா முழுவதிலும் இருந்து 60 ஆயிரம் பேர் களத்துக்கு வந்துள்ளனர். 160 படகுகளின் மூலம் இதுவரை 2,000 பேரை நாங்கள் மீட்டோம். குட்டநாடு உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் 60 இடங்களில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். 14 மாவட்டங்களிலும் உணவு, பணம் வசூலித்து, எளியோர்க்கு வழங்கும் மையமும் திறந்துள்ளோம். காசர்கோடு, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பொருட்களையும், உணவுகளையும் வாங்குவதற்கு என பிரத்யேக முகாம் அமைத்துள்ளோம்.

மீட்பு பணியின் ஒரு அங்கமாக மின்சார வேலை செய்யும் போது பாலக்காடைச் சேர்ந்த ரெகுநாத்(35) உயிர் இழந்தார். இவர் கேரள மின்வாரிய மஸ்தூர் சங்கத்தின் உறுப்பினர். இதேபோல் மீட்பு பணியில் இருந்த பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த விஷால் (22) என்ற தொண்டர் தண்ணீர் அதிகம் வந்தபோது சிக்கி

உயிர் இழந்தார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இருவரை இழந்துள்ளோம். அவர்கள் நினைவோடு பணியை தொடர்கிறோம்” என்றார்.

கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டு, வீடு சேதம் அடைந்த சுப்பிரமணியன் (63) என்பவர் குடும்பத்துடன் தொடுபுழாவில் அரசு அமைத்திருந்த முகாம் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீர் என உடல்நலக்குறைவினால் சுப்பிரமணியன் உயிர் இழந்தார். சுப்பிரமணியின் சடலத்தைப் புதைக்க இடம் இல்லை. தொடர்

மழையினால் சுடுகாடு கொண்டு சென்று எரியூட்டும் சூழலும் இல்லை. இதுகுறித்து விஜயபுரம் பகுதியில் உள்ள செயின்ட் ஆனீஸ் கத்தோலிக்க பங்குத்தந்தை ஜஸ்டின் மடத்துபரம்பிலுக்கு தெரியவர, தன் சபை நிர்வாகிகளுடன் பேசி சுப்பிரமணியின் சடலத்தை ஆலயத்துக்கு கொண்டு வரச்செய்து, ஆலய கல்லறைத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர்.

இதேபோல் கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பங்குத்தந்தை சாமுவேல் குருவிளா என்பவர் பத்தனம்திட்டா மாவட்டம், அடூரில் உள்ள தன் 25 சென்ட் இடத்தை இறந்தவர்களை அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

மலப்புரம் தானூரைச் சேர்ந்த ஜெய்சன் மீன்பிடித் தொழில் செய்பவர். பிறப்பினால் கிறிஸ்தவரான இவர், பல இஸ்லாமியர்களை மீட்டுள்ளார். மீட்பு பணிகளின்போது வந்து நின்ற மீட்பு படகு தரை மட்டத்தில் இருந்து சற்றே உயரமாக இருந்தது. அதில் ஏற முடியாமல் பெண்கள் தவித்தனர். ஒரு நொடிப் பொழுதும் தாமதிக்காமல் மீட்பு

படகுக்கு முன்பாக நீட்டி படுத்துக் கொண்டார் ஜெய்சன். அப்பகுதியினர் அவரது முதுகில் மிதித்து படகில் ஏறும் காட்சிகள் இப்போது கேரளத்தில் வைரலாகி வருகிறது. முஸ்லீம் பெண்களுக்கு முதுகு கொடுத்து, மீட்ட மீனவ வாலிபரின் வீடியோவைப் பார்க்கையிலேயே மனிதம் தெறிக்கிறது.

வரும் 22-ம் தேதி தன் மகளுக்கு திருமணம் வைத்திருந்தார் கொச்சி மேயர் சவுமினி ஜெயின். அதற்கான பணிகளில் முனைப்பாக இருந்த நிலையில் பெருமழை மொத்த கேரளத்தையும் புரட்டிப்போட்டது. இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த மொத்த பணத்தையும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் சவுமினி ஜெயின். மேலும் திருமணத்தையும் இருவீட்டாரை மட்டும் அழைத்து, எளிமையாக நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதேபோல் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு உள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளும் சுற்றுச்சுழன்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x