Last Updated : 23 Aug, 2018 05:52 PM

 

Published : 23 Aug 2018 05:52 PM
Last Updated : 23 Aug 2018 05:52 PM

உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கு: முக்கிய சாட்சி மரணம்; அவசரம் அவசரமாக உடலைப் புதைத்தது ஏன்? எழும் புதிய சர்ச்சை

 

உ.பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்த நிலையில் சிறுமியின் தந்தையைத் தாக்கிய வழக்கில் சிபிஐ-யின் முக்கிய சாட்சியான ஒருவ்ர் கல்லீரல் பாதிப்பினால் மரணமடைந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன்னை பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார், பலாத்காரம் செய்ததாகவும் மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்பு சிங்கை கடுமையாக தாக்கினர்.

ஆனால், அங்கு வந்த போலீஸார், தாக்குதலில் படுகாயமடைந்த பப்பு சிங்கை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறைக்குள் பப்பு சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏ குல்தீப் சிங், அவரது உதவியாளர் சாஷி சிங் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று முக்கிய சாட்சியான யூனுஸ் (30) என்பவர் மரணமடைந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து கடும் சந்தேகங்களை பலாத்காரப் பாதிப்பு சிறுமியின் மாமா எழுப்பியுள்ளார்.

யூனுஸ் கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இந்நிலையில் மருத்துவர்கள் கையை விரித்ததால் அவர் மரணமடைந்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் இந்தத் தகவல் குறித்தே இப்போது சர்ச்சையும், சந்தேகமும் எழுந்துள்ளது.

சிறுமியின் மாமா கேள்வி எழுப்புகையில், ஏன் முக்கிய சாட்சியின் உடலை அவசரம் அவசரமாகப் புதைக்க வேண்டும்? பிரேதப் பரிசோதனை செய்யவில்லை. இறந்தவரின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கவில்லை, சிபிஐக்கும் தகவல் அளிக்கப்படவில்லை, எனவே இதில் மர்மம் உள்ளது என்று ஐயம் எழுப்பியுள்ளார். மேலும் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் சாஃபிப்பூர் சரக போலீஸ் அதிகாரி விவேக் ரஞ்சன் ராய் இத்தகைய குற்றச்சாட்டுகள் மீது விசாரணை செய்து கூறும்போது, மருத்துவர்களிடமும் குடும்பத்தினரிடமும் பேசியபோது யூனுஸ் கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் வீக்கத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். அதனால்தன இறந்தனர் என்றும் கூறினர் என்றார்.

“கடந்த 2013 முதல் ஷுக்லாகஞ்ச், கான்பூர் மற்றும் லக்னோவில் அவர் லிவர் நோய்க்காக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முடியாது என்று கையை விரித்தனர். அதனால் அவர் மரணமடைந்தார்” என்றார்.

யூனுஸின் குடும்பத்தாரும் எந்த ஒரு புகாரையும் அளிக்க மறுத்துள்ளனர். ஆனால் சிறுமியின் மாமா தரப்பில் சிபிஐயில் மேற்கொள்ளப்பட்ட மனுவில், “யூனுஸ் சிபிஐ சாட்சி. அவர் சதியின் ஒரு அங்கமாக கொலை செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த யூனுஸ் என்பவரின் சகோதரார் ஜான் மொகமது சதி பற்றிய அனைத்து புகார்களையும் சந்தேகங்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்து தான் இது குறித்து எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும் “யூனுஸின் கல்லீரல் கடும் சேதமடைந்தது. கடந்த 4 மாதங்களாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார், அதுவும் கடந்த 3 மாதங்களாக அவர் படுத்தபடுக்கையாகவே இருந்தார். எனவே நோயினால் இறந்தார்” என்று கூறினார்.

மேலும் சிறுமி பலாத்கார விவகாரத்தில் சிறுமியின் மாமா தன்னை அணுகி யூனுஸின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்க தனக்கு ரூ.10-12 லட்சம் தருவதாகக் கூறியதாகவும் குற்றம்சாட்டினார்.

“நான் என் சகோதரர் உடலை தோண்டி எடுக்க அனுமதிக்க மாட்டேன்” என்று உன்னாவில் யூனுஸின் சகோதரர் ஜான் மொகமது தெரிவித்தார்.

ஆனால் இதுவரை இந்த விவகாரம் குறித்து சிபிஐ தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x