Published : 29 Aug 2018 08:17 AM
Last Updated : 29 Aug 2018 08:17 AM

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...?

இந்தியக் கடலோரப் பகுதிகளை 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலை தாக்கியது. எண்ணற்ற உயிர்களைப் பறி கொடுத்தோம். பல்லாயிரம் கோடி மதிப்பில் சொத்துகள், பொருட்கள் சேதம் ஆயின. தங்களின் படகுகள், வீடுகளை முற்றிலுமாக இழந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆனது.

இந்திய அரசும் மாநில அரசுகளும் முழு மூச்சில் செயல்பட்டன. அப்போதும் ஏராளமான நிதி உதவியுடன் பல நாடுகள் இந்தியாவை அணுகின.

ஒரு பொருளாதார மேதையின் தலைமையில் இயங்கிய இந்திய அரசு, அயல் நாட்டு நிதி உதவிகளை மென்மையாய் மறுதலித்தது. 'நம்மை நாமே பராமரித்துக் கொள்ள முடியும்' என்கிற செய்தி ஆழமாக வேரூன்றப் பட்டது. நிரூபித்தும் காட்டினோம். அப்போது மட்டுமல்ல; 2013-ல் உத்தரகாண்ட், 2016-ல் காஷ்மீர் மாநிலங்களில், வரலாறு காணாத வெள்ளம் தாங்கொணா சோகத்தை, சேதத்தை விட்டுச் சென்றது. முனைந்து செயல்பட்டு, குறுகிய காலத்திலேயே, பழைய நிலையை மீட்டு எடுத்தோம்.

கேரளாவில் மட்டும் ஏன் முடியாது...?

வெளி நாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக, 'பேரிடர் மேலாண்மை சட்டம் 2005' பற்றி அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறது. மொத்தம் 79 பிரிவுகளைக் கொண்ட இந்தச் சட்டம் என்னதான் சொல்கிறது..?

பிரிவு 3-ன் கீழ் அமைந்தது - இந்தியப் பிரதமரைத் தலைவராகக் கொண்ட, 'தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்' என்கிற சிறப்பு அமைப்பு. குறித்த நேரத்தில், சிறந்த முறையில் பலன் அளிக்கிற விதத்தில், தேவையான கொள்கைகள், திட்டங்கள், வழிமுறைகளை வகுக்கிற பொறுப்பு, இந்த அமைப்புக்கு உள்ளது. பிரிவு 6(1).

மேற்கொண்டு இந்த ஆணையம் எவ்வாறெல்லாம் செயல்படலாம், என் னென்ன அதிகாரங்கள், பொறுப்புகள் உண்டு என்றும் பிரிவு 6(2) பட்டியல் இடுகிறது. வெளிநாட்டு நிதியுதவி பெறு வது பற்றி எதுவும் சொல்லப் படவில்லை.

ஆனால், தேவைக்கேற்ப நெறிமுறை களை வகுத்துக் கொள்ள துணைப்பிரிவுகள் 6(2)(a) மற்றும் 6(2)(e) வழி கோலுகின்றன. அதாவது, அயலுதவி பெறக் கூடாது என்று வெளிப்படையாகத் தடை செய்யப்படவில்லை.

அதேசமயம் நாம், பிற நாடுகளுக்குப் பேரிடர்க்கால உதவி நல்குவதைப் பிரிவு 6(2)(h) தெள்ளத் தெளிவாக ஆதரிக்கிறது. இதனை ஒரு முரண்பாடாகக் கொள்ள முடியாது. காரணம், ‘நீயும் தரவேண்டாம்; நானும் தர மாட்டேன்' என்று ஒரு நாடு கூறுவது அநாகரிகம்.

அதாவது, பேரிடர் உதவி கேட்பதும், பெறுவதும், மறுதலிப்பதும், முழுக்கவுமே அவ்வப்போது தேவைக்கு ஏற்ப எடுக்கப்படுகிற மனிதாபிமான நடவடிக் கைகள்தாமே தவிர, அரசியல் ரீதியான முடிவுகள் அல்ல.

கடந்த சில பத்தாண்டுகளில், குறிப் பாக 1991க்குப் பிறகு, பொருளாதார நிலையில் இந்தியா, மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளது. ஆகவேதான் அயலுதவி வேண்டாம் என்கிறோம். வேறெந்த மறை முகக் கொள்கையோ திட்டமோ, அறவே இல்லை. மழை, வெள்ளத்தால் கேரள மாநிலம், கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நிவாரண நிதியாக 21,000 கோடி ரூபாய் தேவைப்படலாம் என்று கேரள அரசு கணக்கிட்டு இருக்கிறது. இந்தத் தொகையுடன் ஒப்பிடும்போது, மிகக்குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு கிட்டி இருக்கிறது. ஆனால் இது தொடக்க நிதியுதவி மட்டுமே. மறு சீரமைப்புக்கான திட்டங்களில் மைய அரசின் பங்களிப்பு, பெருவாரியாக இருக்கலாம்.

ஒன்று மட்டும் உறுதி. தனி நபர்களும் தன்னார்வ அமைப்புகளும் ஓரளவுக்கு மட்டுமே பங்காற்ற முடியும். மத்திய அரசு, மாநில அரசு இணைந்து ஆற்ற வேண்டிய பணிகளே மிக அதிகம். ஆகவே இருவருமே தமது பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்பலாம். காரணம், தேசியக் கட்சிகள் பொதுவாக, அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், மாநில நலன் கருதி, இணங்கிச் செயல்படுகிற வழக்கம் கொண்டுள்ளன. கேரள வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு முறையாகச் செயல் வடிவம் பெறுகிற போது, இந்திய அரசின் இன்றைய முடிவின் நியாயம் நமக்குப் புரிய வரும்.

இதற்கிடையே, அயலுதவி பெறுவதற்கு அனுமதி தர மத்திய அரசை வலியுறுத்தக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டு இருக்கிறது. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதித்துறை எந்த அளவுக்குத் தலையிட முடியும் என்கிற கேள்விக்கு விடையில்லை. மனுவின் மீதான தனது தீர்ப்பின் மூலம், மாண்பமை உச்ச நீதிமன்றம், தெளிவான பாதை காட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x