Last Updated : 15 Aug, 2018 06:31 PM

 

Published : 15 Aug 2018 06:31 PM
Last Updated : 15 Aug 2018 06:31 PM

‘மக்களே பாதுகாப்பாக இருங்கள்; வரலாற்றில் இல்லாத வெள்ளம் பாய்கிறது’: பினராயி விஜயன் எச்சரிக்கை: தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

அதேசமயம், அரசின் முதல் முன்னுரிமையாக, மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதாக இருக்கும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால், இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்மழையால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது.

இந்நிலையில்,கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக, மிகக் கனமழை இருக்கும் என்றும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளித்து வரும் கேரள மக்களை இந்தச் செய்தி மேலும் அச்சுறுத்தியுள்ளது.

மாநிலத்தில் மீட்புப்பணியில் ராணுவத்தினர், பேரிடர் மீட்புக்குழுவினர், போலீஸார், தீயணைப்பு படையினர் எனப்பலரும் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பினராயி விஜயன் இன்று தனது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் மீட்புப்பணிகள் குறித்தும், எவ்வாறு மழைக்குத் தயாராகி இருக்கிறோம் என்பது குறித்தும், நிவாரணப்பொருட்கள் இருப்பு, மக்களின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் பினராயி விஜயன் கேட்டறிந்தார்.

அதன்பின் முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால், மக்களுக்கு நீரைச் சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள், மோட்டார்கள் ஏராளமானவே பழுதடைந்து இருக்கின்றன.

கேரளாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதலால், கேரளாவில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

அனைத்து அதிகாரிகளும் வெள்ள நிவாரணப்பணிகளில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து விஷயங்களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு அரசு மிகுந்த அக்கறை காட்டும், முன்னுரிமை அளிக்கும்.

அண்டை மாநிலங்கள் ஏராளமான உதவிகளை எங்களுக்குச் செய்து வருகின்றன. அதற்கு நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு மழைநின்றுபின்பும் அதிகமான உதவித் தேவைப்படும், அதைச் செய்யவேண்டும் என அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியுடன் பினராயி விஜயன் பேச்சு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டும் 142 அடியை எட்டிவிட்டதால், கேரள மாநிலத்தின் பகுதிக்கு அதிக அளவுநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே இடுக்கி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில், முல்லைபெரியாறில் இருந்து திறக்கப்படும் நீரும் இடுக்கி அணைக்கு செல்லும் என்பதால், கூடுதல் நீரை திறக்க வேண்டிய கட்டாயத்துக்கு இடுக்கி அணை இருக்கும்.

ஆதலால், முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறந்துவிடக் கோரி முதல்வர் பழனிசாமியை கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், நேற்று நள்ளிரவு முல்லைபெரியாறு அணை 142 அடியை எட்டியதால், தேக்கடி வழியாக பெரியாற்றில் 13 மதகுகள் வழியாக நீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x