Published : 31 Aug 2018 02:58 PM
Last Updated : 31 Aug 2018 02:58 PM
மனைவியின் பிரசவத்திற்காக 4 வயது பெண் குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்க முயன்றவரை போலீஸார் தடுத்து நிறுத்தியதுடன் அவருக்கு தேவையான பண உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
கன்ஜோஜ் மாவட்டத்தின் பாரெதி தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த அர்விந்த் பஞ்சாரா. இவர் தனது கர்ப்பிணி மனைவி சுக்தேவிக்கு பிரசவசத்தில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டதால் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பிரசவ சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடு செய்யும்படி மருத்துவர்கள் அவரைக் கேட்டனர். இவர்களுக்கு 4 வயதில் ரோஷினி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாரா ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ‘‘மாவட்ட மருத்துவமனையில், என் மனைவியின் சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடு செய்யும்படி மருத்துவர்கள் கூறினர். மேலும், ரத்தம் ஏற்பாடு செய்யவில்லையென்றால் பிரசவத்தின்போது உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். என்னிடம் பணம் இல்லை. குழந்தையை விற்பதைத் தவிர எனக்கு வேறு வழியும் தெரியவில்லை'' என்றார்.
இதுகுறித்து சுக்தேவி தெரிவிக்கையில், குழந்தையை விற்பது சாதாரணமானது அல்ல. ஆனால் எங்களுக்கு வேறுவழியே இல்லை என்ற நிலைமையில்தான் இதை செய்யவேண்டியிருந்தது. ஏற்கெனவே எனது சிகிச்சைக்காக வேறு சில மருத்துவமனைகளையும் அணுகினோம்'' என்றார்.
எது எப்படியாயினும், ''குழந்தையை விற்கவேண்டாம் சிகிச்சைக்கான முழு செலவுத் தொகை நாங்கள் ஏற்கிறோம்'' என்று சொல்லி குழந்தையை விற்க முயன்றதை போலீஸார் தடுத்துள்ளனர்.
திர்வா காவல்நிலைய அதிகாரி அமோத் குமார் சிங் உதவ முன்வந்த சூழ்நிலையை விவரிக்கையில், ‘‘சிகிச்சைக்கு பணமின்றி இத்தம்பதிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ள நிலை குறித்து முதலில் சாதாரண ஒரு செய்தியாகத்தான் வந்தது. இதற்கிடையில் தங்களின் 4 வயது பெண் குழந்தையை அவர்கள் விற்க முயற்சி செய்துகொண்டிருப்பதை அறிந்தபோது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
அப் பெண் தனது பிரசவத்திற்கு ரத்தம் தேவைப்படும் நிலையில் உதவி செய்ய ஆளின்றி அவதிப்படுவதுதான் இதற்கு காரணம் என்பதையும் கண்டுபிடித்தோம். அப்பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவும் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். பணம் மட்டுமல்ல தேவைப்பட்டால் ரத்தமும் உடனே ஏற்பாடு செய்து தரமுடியும்.''
இவ்வாறு திர்வா காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.
சிகிச்சைக்கான உதவிகள் செய்ய முன்வந்த போலீஸாரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT