Published : 27 Aug 2018 07:17 PM
Last Updated : 27 Aug 2018 07:17 PM
கிறித்துவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாகாலாந்தில் வாஜ்பாய் அஸ்தியை தோயாங் நதியில் கரைக்க பழங்குடி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அஸ்தி ‘பெயரற்ற நதி’ ஒன்றில் கரைக்கப்பட்டது.
நாகாலாந்தில் பாயும் மிகப்பெரிய நதி தோயாங், இது மாநிலத்தின் 2வது பெரிய சிகரமான ஜப்ஃபூவிலிருந்து பெருக்கெடுக்கும் நதியாகும்.
இதில் வோக்கா மாவட்டத்தில் ஓடும் இந்த நதியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை கரைப்பதாக இருந்தது. இங்கு லோதா நாகர்கள் என்ற பிரிவினர் அதிகம் வசிக்கிறார்கள்.
இந்நிலையில் ஞாயிறன்று லோதாக்களின் அமைப்பான லோதா ஹோஹோ, “நாகா பண்பாடு, மற்றும் மதநம்பிக்கைகளுக்கு அந்நியமான சடங்கு சம்பிரதாயங்களை நாகாலாந்தில் எங்கு வேண்டுமானாலும் பாஜக செய்து கொள்ளட்டும். வோக்கா வேண்டாம். மேலும் எங்கள் உள்ளூர் உணர்வுகளை மதிக்க வேண்டும்” என்று கூறி அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது.
நாகாலாந்து பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி வெள்ளியன்று இது குறித்து கருத்து கூறிய போது, வாஜ்பாயின் அஸ்தியை இந்த நதியில் கரைப்பது ‘எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதது’ என்று கூறியிருந்தது.
மேலும் பாஜகவும் அதன் நாகாலாந்து கிளையும் சில்லரை அரசியல் பயன்களுக்காக வாஜ்பாயின் அஸ்தியை வைத்து ‘சர்க்கஸ்’ காட்டியது என்று பிரதேச காங்கிரஸ் கமிட்டி சாடியுள்ளது.
நாகாலாந்து ஒருங்கிணைந்த கிறித்துவ அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திமாபூர் மாவட்டத்தில் பெயர் தெரியாத ஒரு நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டதாக பாஜகவின் நாகாலாந்து கிளைத் தலைவர் தெம்ஜென் இம்னா தெரிவித்தார். திமாபூர் பாஜக அலுவலகத்துக்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையடுத்து, யார் உணர்வையும் புண்படுத்த விரும்பவில்லை என்று பாஜக திட்டத்தை மாற்றிவிட்டது.
திமாபூர் நகராட்சி எல்லைகளுக்குள் வராத ஒரு சிறிய நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது.
ஆனால் இன்னொரு கிறித்துவப் பெரும்பான்மை மாநிலமான மிஜோரத்தில் லாங் நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டதில் எந்த ஒரு எதிர்ப்பும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT