Published : 26 Aug 2018 08:16 AM
Last Updated : 26 Aug 2018 08:16 AM
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் அமராவதியில் நேற்று நேரில் சந்தித்து திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கு அழைப்பு விடுத்தார். வரும் 13-ம் தேதி, ஆந்திர அரசு சார்பில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்க உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடை பெற உள்ளன. இதனையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று அமராவதிக்கு சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நேரில் அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு, அன்றைய தினம் மாலை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்க உள்ளார் என அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் ஏழு மலையான் கோயில் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 5-ம் நாளான 17-ம் தேதி இரவு கருட வாகனமும், 20-ம் தேதி தேர்த்திருவிழாவும், 21-ம் தேதி சக்கர ஸ்நானமும் நடைபெற உள்ளன.
இதேபோன்று, நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 10-ம்தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2-ம் பிரம்மோற்சவத்துக்கு கொடி ஏற்றம் இருக்காது. இதில், 14-ம் தேதி கருட சேவையும், 17-ம் தேதி தேர் திருவிழாவும், 18-ம் தேதி சக்கர ஸ்நானமும் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT