Published : 25 Aug 2018 10:47 AM
Last Updated : 25 Aug 2018 10:47 AM
கேரளாவில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில் வீடுகளில் பதுங்கியுள்ள பாம்புகளை வெளியேற்றுவது பெரும் சவாலாக உள்ளது. பாம்பு கடிக்கு ஆளாகி பலர் சிகிச்சைக்காக வருவதால் அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. உணவுப் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், நிதியுதவி என கேரள மக்களுக்கு நாடுமுழுவதும் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது.
வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். வீடுகளை சுத்தம் செய்து, வீணான பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ள சமயத்தில் வெளியே இருந்த பாம்புகள் அடைக்கலமாக வீடுகளுக்குள் வந்துள்ளன. வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பல வீடுகளிலும் பாம்புகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டு அறைகளின் மேல்தளங்கள், பீரோக்கள், சாமன்கள் வைக்கும் இடங்களில் ஏராளமான பாம்புகள் சென்று பதுங்கியுள்ளன. இதனை தெரியாமல் சிலர் உள்ளேன சென்று அலறியடித்தனர்.
வேறு சிலர் பாம்புகள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பாம்பு கடித்து பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்துள்ளனர். இதையடுத்து பாம்புகள் தொடர்பாக கேரள அரசு சுற்றிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ‘‘வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பாம்புகள், பூச்சிகள், விஷ உயிரினங்கள் பதுங்கி இருக்கின்றன. வெள்ளம் வடிந்த வீடுகளுக்கு செல்லும் மக்கள் வீடுகளை சுத்தம் செய்யும் முன்பு உள்ளே உள்ள விஷ உயிரினங்கள் குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பாம்புகள் இருந்தால் அவற்றை வெளியேற்றிய பின்பே சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும். அதுமட்டுமின்றி பாம்புகளை வெளியேற்ற நீண்ட கம்புகளை பயன்படுத்த வேண்டும்.
கொடூர விஷமுள்ள பாம்புகள் இருந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியுடன் வெளியேற்ற வேண்டும். பாம்பு கடி சிகிச்சைக்காக பலரும் வரும் சூழல் இருப்பதால் அரசு மருத்துவமனைகளில் அதற்கான மருந்துகளை போதிய அளவு கையிருப்பு வைக்க வேண்டும். சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT