Published : 26 Aug 2018 08:53 AM
Last Updated : 26 Aug 2018 08:53 AM
நீதிமன்ற உத்தரவை மீறியதால், தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரிக்கு 30 நாட்கள் சிறை தண்டனை விதித்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலங்கானா மாநிலம், மகபூப் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் புச்சய்யா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது நிலத்தில் திருமண மண்டபம் கட்டத் தொடங்கினார். ஆனால் புச்சய்யா சட்ட விரோதமாக அரசு நிலத்தில் திருமண மண்டபம் கட்டுவதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மகபூப் நகர் மாவட்ட, இணை ஆட்சியரான சிவக்குமார் நாயுடுவிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த, மகபூப் நகர் மாவட்ட நீதிமன்றம் மூலமாக இடைக்கால உத்தரவை இணை ஆட்சியர் பெற்றார்.
இதை எதிர்த்து, புச்சய்யா ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் திருமண மண்டப கட்டுமானப் பணி களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனிடையே, மாவட்ட இணை ஆட்சியரான சிவக்குமார் தனது பதவியின் அதிகாரத்தை உபயோகித்து, புச்சய்யா சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை 3 மாதங்களுக்கு சிறையில் அடைக்குமாறு மகபூப் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், புச்சய்யா கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் புச்சய்யா சொந்த ஜாமீனில் வெளியே வந்தார்.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் இடைக்கால தடை உத்தரவு இருக்கும்போது, நீதிமன்றத்தை அவமதிக்கும்படி, நடந்துகொண்ட மாவட்ட இணை ஆட்சியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதை நேற்று விசாரித்த நீதிபதி நவீன் ராவ், நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய இணை மாவட்ட ஆட்சியர் சிவக்குமாருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித் தார்.
இதைத்தொடர்ந்து சிவக்குமார் கைது செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT