Last Updated : 04 Aug, 2018 04:03 PM

 

Published : 04 Aug 2018 04:03 PM
Last Updated : 04 Aug 2018 04:03 PM

நிதிஷ் சார்..உங்களுக்குப் பெண் குழந்தை இல்லையா?:- டெல்லி மகளிர் ஆணையம் காட்டமான கேள்வி

 

பீகார் முசாபர்பூர் மாவட்டத்தில் காப்பகம் ஒன்றில் 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமாருக்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் காட்டமாகக் கேள்வி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

“ நிதிஷ் சார், உங்களுக்குப் பெண் குழந்தை இல்லையா?, பாதிக்கப்பட்டவர்களில் உங்களுடைய மகள் இருந்தால்கூட இப்படித்தான் மெத்தனமாக இருந்து தாமதமாக நடவடிக்கை எடுப்பீர்களா என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், சேவாக் சங்கல்ப் இவான் விகாஷ் சமிதி சார்பில் பிரிஜேஷ் தாக்கூர் என்பவர் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தக் காப்பகத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இவர்களுக்கு இரவு உணவில் மயக்க மருந்து கொடுத்து அந்தக் காப்பகம் நடத்துபவர்கள் பலாத்காரம் செய்து வந்தனர். சமீபத்தில் டாடா சமூக அறிவியல் நிறுவனம் இந்தக் காப்பகத்தில் ஆய்வு நடத்திய போது 15 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் அங்கிருக்கும் 42 சிறுமிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருக்கும் 42 சிறுமிகளில் 34 சிறுமிகள் மாதக்கணக்கில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதும், பலருக்கு கருக்கலைப்பு செய்திருப்பதும் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாக்கூர் , ஊழியர்கள் 10 பேர் என மொத்தம் 11 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மீது கடந்த மாதம் 26-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் ஏராளமானோருக்குத் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கப் பரிந்துரை செய்து பிஹார் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு காட்டமாக கடிதம் எழுதி அதை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நிதிஷ் குமார் சார், உங்களுக்குப் பெண் குழந்தை இல்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். முசாபர்நகர் மாவட்ட காப்பகத்தில் 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்களே, அதில் உங்களின் மகளும் ஒருவராகப் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படித்தான் இருப்பீர்களா.

உங்களின் இந்தச் செயல்பாட்டால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பெண்கள், சிறுமிகளின் மதிப்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.

இந்த காப்பகத்தில் தங்கிய அப்பாவி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கையை பீகார் மாநில அரசு எடுத்துள்ளது. எங்களுடைய குழு, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆதரவாகப் பணியாற்ற தயாராக இருக்கிறது. தேசச்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் எங்களைப் போல் உதவி செய்ய காத்திருக்கிறார்கள்.

முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாதிக்கப்பட்ட விவகாரம் என் தூக்கத்தை கெடுத்துவிட்டது. சிறுமிகளின் மீதான பாலியல் வன்முறையும், வலியும், நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும். பீகார் மாநிலம் என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வராது என்பது தெரியும், இருந்தாலும், ஒரு பெண் என்பதால் உங்களுக்கு இந்த கடித்ததை எழுதுகிறேன், இதை நீங்கள் படிப்பீர்கள் என நம்புகிறேன்.

முசாபர்பூர் காப்பகத்துக்குச் சென்று தணிக்கை செய்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதமே அறிக்கை அனுப்பிவிட்டது. ஆனால், பீகார் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் அந்தக் காப்பக உரிமையாளருக்கு எதிராக 3 மாதங்களாக எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. அதற்குப் பதிலாக அந்தக் காப்பகத்தை நடத்திவரும் அரக்கன் பிரேஜேஸ் தாக்கூருக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறித்து ஊடகங்கள் வெளிச்சத்துக்கு வந்தபின்பும், நீங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்துப் பார்க்கவில்லை. சூழலைப் பார்த்து சிபிஐக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளீர்கள். உங்களின் இந்த முடிவால்தான் பிரேஜேஸ் தாக்கூர் கைது செய்யப்பட்ட போதிலும் கூட அவர் முகத்தில் மிகப்பெரிய புன்னகையை நாங்கள் பார்க்கிறோம்.

இன்னும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஏன் நீதி பெற்றுத்தர அரசால் முடியவில்லை, அந்தச் சிறுமிகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியவில்லை.

அந்த சிறுமிகள் இன்னும் காப்பகத்தில் அடைபட்டுக் கிடக்க வேண்டுமா அல்லது அவர்கள் எதிர்காலத்துக்காக அரசு ஏதும் உதவி செய்யப்போகிறதா, அவர்களுக்காக நல்ல பள்ளிக்கூடம் ஏதும் தொடங்கப்பட்டு இருக்கிறதா அவர்களுக்கு மனரீதியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதா

இவ்வாறு ஸ்வாதி மாலிவால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x