Published : 28 Aug 2018 07:20 PM
Last Updated : 28 Aug 2018 07:20 PM

கடவுளின் தேசத்தில் களமிறங்கிய கேரளம் காப்போம் குழுவினர்: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விநியோகம்

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையான 3.48 கோடியில், 40% பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து 'துவக்கம்' என்ற தன்னார்வ அமைப்பு, 'கேரளம் காப்போம்' என்ற கருப்பொருளுடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க், சி.என்.எஸ்.ஐ, ஃப்ரான்ச் எக்ஸ்பிரஸ் கொரியர் ஆகியவற்றுடன் இணைந்து கேரள மக்களுக்கு உதவ முடிவெடுத்தது.

வயநாடு- பனமரம்- பழங்குடி கிராமங்களில் உதவி

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரளத்தின் உட்புற பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பனமரம் என்ற பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று உதவ ஆலோசித்தனர்.

அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரியில் சுமார் 17 மணி நேரம் பயணித்து வயநாட்டை அடைந்தது 20 பேர் அடங்கிய தன்னார்வலர் குழு. மாவட்ட துணை ஆட்சியர் உமேஷ் உதவியுடன் தன்னார்வலர் குழுவுக்கு உதவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

கடவுளின்தேசத்தில்களமிறங்கியகுழுவினர்

பனமரம் கிராமத்தில் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டன. சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. அதனால் நிவாரணப் பொருட்கள் அனைத்தையும் ஜீப்பில் ஏற்றிச்செல்ல முடிவெடுத்தனர். தன்னார்வலர்கள் குழு கிராமங்களினூடே பயணிக்க தன்னார்வலர்களின் 10 ஜீப்கள் களமிறக்கப்பட்டன.

அரசு சார்பில் ஒருவரும் தன்னார்வலர் ஒருவரும் இணைந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜீப்பில் பயணித்தனர். அரிசி, பருப்பு, சர்க்கரை, பிஸ்கெட், குடிநீர் பாட்டில்கள் ஆகிய உணவுப் பொருட்களும் சோப், பேஸ்ட், பாய், எண்ணெய், பிரஷ், டயப்பர், பாத்திரங்கள், தீப்பெட்டி, கடுகு, மிளகு,சீரகம், வெந்தயம், ஊறுகாய், மெழுகுவர்த்தி, நாப்கின்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவையும் லுங்கி, நைட்டி, உள்ளாடைகள், போர்வை உள்ளிட்ட ஆடைகளும் வழங்கப்பட்டன.

இவையனைத்தும் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டன. வெள்ளத்தால் வேலை இழந்து, வீடு வாசல் துறந்து, உணவு மறந்த சுமார் 57 கிராமங்கள் இதில் பயன்பெற்றுள்ளன.

அத்துடன் முதியோர் காப்பகம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதைப் பகிர்ந்துகொள்வதில் தன்னார்வலர் குழு மனநிறைவு கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x