Published : 03 Aug 2018 01:38 PM
Last Updated : 03 Aug 2018 01:38 PM
கிகி நடனம் என்ற பெயரில் மாநிலத்திற்கு தொடர்ந்து ஆபத்தான நிலையை உருவாக்கும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா இன்று (வியாழக் கிழமை) கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஓடும் கார்களிலிருந்து வெளியேறி தாவி ’இன் மை பீலிங்ஸ்’ என்ற பாடலை காரில் அலறவிட்டு தெருக்களில் நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்ற சவாலை ஏற்று சிலர் இச்செயலில் இறங்கியுள்ளனர்.
இந்த வினோதமான சமூக ஊடக தாக்கம் பல விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது மிகுந்த கவலையை அளிக்கிறது.
இது மிகவும் ஆபத்தானது. இளைஞர்கள் தெருக்களில் இறப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆபத்தை நாம் ஏன் விரும்ப வேண்டும். இதற்கு சட்டத்திலும் இடமில்லை. எனவே, இதைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறோம், ஆனால் இது தொடருமேயானால் போலீஸ் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று பரமேஸ்வரா தெரிவித்தார்.
இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் அவரது அறிக்கை மாநிலத்தின் மற்ற உயரதிகாரிகள், பெங்களூரு காவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
''சாலையில் இறங்கி நடனம் ஆடினால் பின்னர் குற்றவாளிக் கூண்டில் ஏறி ஆட வேண்டியிருக்கும். சட்டத்தின் கிக்கை நீங்கள் பெற கிகி சவால் விடுக்கிறது.
நடனத்தின் கிக்கை அல்ல’’ என்று பெங்களூரு நகர போலீஸ் உயரதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்ற எச்சரிக்கைகள் முன்னதாக மும்பை காவல்துறை, உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT