Published : 09 Aug 2014 10:47 AM
Last Updated : 09 Aug 2014 10:47 AM

அடித்தட்டு மக்களுக்கும் ஆயுர்வேத சிகிச்சை: ‘ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கிராமம்’ தொடக்க விழாவில் உம்மன் சாண்டி பேச்சு

அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் ஆயுர்வேத சிகிச்சை கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பகுதியில் கீழக்கொம்பு அடுத்த நெல்லிக்காட்டு மணா பகுதியில் உள்ளது ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம். ஆயுர்வேத சிகிச்சையில் அதிக அனுபவமும் நீண்ட பாரம்பரியமும் கொண்ட இந்நிறுவனம் தற்போது அப்பகுதியில் ‘ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கிராமம்’ என்ற பிரத்தியேக கிராமத்தை உருவாக்கியுள்ளது. வெவ்வேறு வகையான நோய்களுக்கு உலகத் தரத்தில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதற்காக ஃபைவ் ஸ்டார் தரத்தில் 20 ‘ஆயுர் வில்லா’க்கள் இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான கிராமத்தில் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை தலைசிறந்த மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது.

ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கிராமத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, ‘‘அடித்தட்டு மக்கள் உட்பட மாநிலத்தில் அனைவருக்கும் தரமான ஆயுர்வேத சிகிச்சை கிடைப்பது உறுதிசெய்யப்படும். ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் இல்லாத 70 கிராம பஞ்சாயத்துகளில் வரும் டிசம்பருக்குள் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்’’ என்றார்.

‘ஸ்ரீதரீயம்’ சார்பில் 50 பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டமும் தொடங்கிவைக்கப்பட்டது.

கேரள அமைச்சர் அனூப் ஜேக்கப், ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை தலைவர் என்.நாராயணன் நம்பூதிரி, நிர்வாக இயக்குநர் டாக்டர் என்.பி.பி.நம்பூதிரி, நிர்வாகி ஹரி என்.நம்பூதிரி பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x