Published : 07 Aug 2018 08:34 AM
Last Updated : 07 Aug 2018 08:34 AM
மனைவியின் மீது உள்ள கோபத்தில், ஒன்றுமறியா தனது 3 மகன்களை ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை ஆந்திர போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்துள்ள கங்காதர நெல்லூர் மண்டலம், பால கங்கனபல்லியை சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடேஷ். இவரது முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காததால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த அமராவதி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் (5), புனித் (4), ராகுல் (2) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இதனிடையே, வெங்கடேஷுக்கு குடி பழக்கம் ஏற்பட்டது. இதனால், தம்பதியினரிடையே தினமும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கடந்த வாரம், அமராவதி கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் ஞாயிற்றுக் கிழமை இரவு, தனது மாமியார் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ், தனது மனைவியை சமாதானப்படுத்தி, மனைவி மற்றும் 3 மகன்களையும் பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது, வழியில் மீண்டும் தம்பதியினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. குடி போதையில் இருந்த வெங்கடேஷ், 3 மகன்களையும் கண் இமைக்கும் நேரத்தில் பாலத்தின் மீதிருந்து ஆற்றில் வீசினார் வெங்கடேஷ், இதனை சற்றும் எதிர்பாராத அமராவதி, செய்வதறியாது, கதறி துடித்தார். இதை பார்த்து அந்த வழியே சென்றவர்கள், விசாரிப்பதற்குள், அங்கிருந்து வெங்கடேஷ் தப்பி தலைமறைவானார்.
நேற்று அதிகாலை 3 குழந்தைகளின் உடல்களும் கரை ஒதுங்கின. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT