Published : 21 Aug 2018 02:43 PM
Last Updated : 21 Aug 2018 02:43 PM

பெண்ணை நிர்வாணப்படுத்தி சாலையில் அடித்து இழுத்துச் சென்ற கும்பல்: பிஹாரில் வெறிச்செயல்

பிஹாரில் போஜ்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரைக் கொன்றுவிட்டார் எனச் சந்தேகப்பட்டு, இளம்பெண் ஒருவரைச் சாலையில் நிர்வாணமாக்கி ஒரு கும்பல் அடித்து இழுத்துச் சென்ற கொடுமை நடந்துள்ளது.

போஜ்பூர் மாவட்டம், அரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது பிஹியா நகரம். இங்குள்ள ரயில்வே இருப்புப் பாதையில், 19 வயதான பிம்லேஷ் சாவ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டு சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து அறிந்த அந்த இளைஞரின் சொந்த கிராமமான தாமோதர்பூர் கிராமத்தினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் சம்பவம் நடந்த பிஹியா நகருக்கு வந்தனர். பிம்லேஷ் உடலைப் பார்த்தபோது, அவரின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதைப் பார்த்து அந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.

பிம்லேஷ் மர்ம சாவுக்கும், ரயில்வே இருப்புப்பாதையை ஒட்டி இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகக் கிராம மக்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து, சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண்ணை அந்தக் கிராம மக்கள் இழுத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அந்தக் கும்பலில் இருந்த சிலர் அந்தப் பெண்ணை திடீரெனத் தாக்கத் தொடங்கி, அந்தப்பெண்ணின் உடலில் இருந்த ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை சாலையில் நிர்வாணமாக அடித்து இழுத்து வந்து அசிங்கப்படுத்தினார்கள்.

இந்தத் தகவல் அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபின், அவர்கள் வந்து கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர், ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

அந்தக் கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போஜ்பூர் போலீஸ் எஸ்பி அவாஷ் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,  ''இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து வந்தது தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உள்ளூர் தலைவர் உள்பட 15 பேரைக் கைது செய்துள்ளோம். பிஹியா போலீஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரி பொறுப்பின்மையோடு செயல்பட்டதால், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ''சட்டம் ஒழுங்கு இல்லாத பிஹார் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, அடித்து வன்முறை கும்பலால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஒரு பெண்ணை கொடூரமாக நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போது என்னால் பதில் பேச முடியவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று முதல்வர் நிதிஷ் குமாரை கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x