Published : 27 Aug 2018 03:54 PM
Last Updated : 27 Aug 2018 03:54 PM

பாதையை மறித்த யானைகள்: கடைசி நொடியில் ரயிலை நிறுத்தி உயிரைக் காத்த ஓட்டுநர்கள்

தண்டவாளத்தைக் கடந்து சென்ற யானைகளைக் கடைசி நொடியில் பார்த்தபோதும் திறமையுடன் ரயிலை நிறுத்தி யானைகளைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள சிவோக் மற்றும் கும்லா ரயில் நிலையங்களுக்கு இடையிலான வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெரும்பாலான ரயில் ஓட்டுநர்கள் தங்களின் பாதையை நிதானமாகக் கடந்து செல்லும் யானைகளுக்காகக் காத்திருப்பதில்லை. ஆனால் பமன்கத் - சிலிகுரி பாசஞ்சர் வண்டியைச் சேர்ந்த அமர்நாத் பகத் மற்றும் பவன்குமார் என்னும் இரண்டு ஓட்டுநர்கள், தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த யானைகளைக் கடைசி நொடியில் கண்டு, உடனடியாக ரயிலை நிறுத்தி அவற்றின் உயிரைக் காத்துள்ளனர்.

அங்கிருந்து அவை வனத்துக்குள் செல்லும் வரை காத்திருந்து ரயிலை இயக்கியுள்ளனர்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய பகத், ''என்னுடைய உதவியாளர் குமார் மாலை 5.35 மணியளவில் யானைகளைப் பார்த்தார். தண்டவாளத்தில் வளைவு இருந்ததால் எனக்கு யானைகள் தெரியவில்லை. ஆனால் அவரின் சத்தத்தைக் கேட்டவுடன் நான் பிரேக்கை அழுத்திவிட்டேன். அப்போது யானைகள் ரயிலில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இருந்தன. பின்னர் அவை மெதுவாக நடந்து சென்றன.

யானைகள் வனத்துக்குள் சென்று மரங்களுக்குப் பின்னர் மறையும் வரை 10 நிமிடங்களுக்கும் அதிகமாகக் காத்திருந்தோம்'' என்றார்.

29 யானை வழித்தடங்கள்

வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே (NFR) கிளையின் கீழ் இந்த வனப்பகுதி வருகிறது. மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் மட்டும் 29 யானை வழித்தடங்கள் உள்ளன. அந்தப் பாதைகளில் கடந்த 5 வருடங்களில் மட்டும் ரயில்களால் 30 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x