Last Updated : 08 Jul, 2018 04:43 PM

 

Published : 08 Jul 2018 04:43 PM
Last Updated : 08 Jul 2018 04:43 PM

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்: சமாஜ்வாதி, டிஆர்எஸ் கட்சி ஆதரவு; திமுக எதிர்ப்பு

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது.

இந்தக் கருத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆதரவு தெரிவித்தது. தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள கட்சிகளும், அதிமுக சிரோமணி அகாலி தளம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இந்தத் திட்டத்துக்கு திமுக, ஏஐஎம்ஐஎம், ஏஐயுடிஎப் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் நிலைப்பாடு, கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், சட்ட ஆணையம் 2 நாள் கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் நேற்ரு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில கட்சிகள், தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், “ நாடுமுழுவதும் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு சமாஜ்வாதி ஆதரவு தெரிவிக்கிறது. அதேசமயம், கட்சி மாறுதல், குதிரை பேரம் போன்றவை நடத்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்களும் தேவை” எனத் தெரிவித்தார்.

மேலும், தெலங்கானாவில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தேசிய சட்ட ஆணையத்துக்குத் தனது பிரதிநிதி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், திமுக கட்சி இந்த திட்டத்துக்கு கடுமையாக எதிர்க்கிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் கூட்டாட்சி முறையைச் சிதைக்கும் முறையில் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல் முறையைக் கொண்டுவருகிறது. ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கும், ஜனநாயகத்தின் கொள்கை செயல்பாட்டுக்கும் எதிரானது என்று திமுக கருதுகிறது என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் மூத்த தலைவர் திருச்சி சிவா கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். அவர் கூட்டத்தில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் முன்வைத்தார். கூட்டம் முடிந்தபின் நிருபர்ளுக்கு திருச்சி சிவா அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘‘அரசியலமைப்புச் சட்டம் என்பது அனைத்து வகையிலும் மாற்றப்படாமல் இருக்கவேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு, ஆனால், அடிப்படை அமைப்புகள் நீர்த்துப்போகச் செய்ய முடியாது. அடிப்படை அமைப்புகள் மீது எந்தவிதமான திருத்தமும் செய்யும் திட்டமும், நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் முயற்சியாகும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதைத் திசைதிருப்பும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.ஒரேநேரத்தில் தேர்தல் நாட்டுக்கு அவசியமில்லை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.3,870 கோடிதான் தேவைப்பட்டது. அதாவது ஒரு வாக்காளருக்கு ரூ.45 மட்டும்தான். ஆதலால், இது மிகப்பெரியசெலவு என்பது எப்படிச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஸ்வீடன், பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் என்பது அங்கு மக்கள் தொகை குறைவு அது சாத்தியம் ஆனால், தமிழகத்தில் மட்டும் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். நாட்டில் 132 கோடி மக்கள் இருக்கிறார்கள் இது எப்படி இங்குச் சாத்தியமாகும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x