Last Updated : 04 Jul, 2018 08:28 AM

 

Published : 04 Jul 2018 08:28 AM
Last Updated : 04 Jul 2018 08:28 AM

உ.பி., பிஹாரில் மத நல்லிணக்கத்துக்கு முன் உதாரணம்: 51 கோயிலுக்கு நன்கொடை வழங்கிய முஸ்லிம்

உத்தரபிரதேசம், பிஹாரில் 51 கோயில்கள் கட்டுவதற்கு நிலம், தொகையை நன்கொடையாக ஒரு முஸ்லிம் தொழிலதிபர் அளித்து மதநல்லிணக்கத்துக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறார்.

உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் ராஷீத் நசீம். ஷைன் குரூப் எனும் பெருநிறுவனத்தின் தலைவரான இவர், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தமது நிறுவனம் சார்பில் உபி,பிஹாரில் மொத்தம் 51 கோயில்கள் கட்டுவதற்கு நிலம், ரொக்கத் தொகையை நன்கொடையாக அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஷீத் நசீம் கூறும்போது, “இந்த வருடம் 21 கோயில்களும், அடுத்த வருடம் 30 கோயில்களும் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு முஸ்லிமாக நான் மற்ற மதங்களின் நலனுக்காக பணியாற்ற எந்த தடையும் இல்லை. மதநல்லிணக்கத்தை வளர்க்கும் இந்த முயற்சி நம் சமூகத்தில் சகோதரத்துவத்தையும், அமைதியையும் வளர்க்கும் என நம்புகிறேன்” என்றார்.

ராஷீத் கட்டும் முதல் கோயில் அலகாபாத்-வாரணாசி நெடுஞ்சாலையில் ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. அலகாபாத்தில் 2013 ஆம் ஆண்டில் நிலத்தரகராக தமது தொழிலை துவக்கிய ராஷீத் தற்போது சுற்றுலா மற்றும் குடிநீர் சுத்திகரிப்புத்துறையில் வளர்ந்து உபி, பிஹார் மாநிலங்களில் புகழ் பெற்ற தொழிலதிபராக வளர்ந்துள்ளார்.

இவர் பிரதமர் நரேந்திர மோடியை தனது முன்மாதிரியாகக் கொண்டு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்துள்ளார்.

சிந்துசமவெளி நாகரிகம் என்பது போல், அவத் பிரதேசம் என்று அழைக்கப்படும் உ.பி.க்கும் ஒரு நாகரிகம் உண்டு. இது, கங்கை, யமுனை நதிகளை போல் இந்து மற்றும் முஸ்லிம்கள் இணைந்து சமூகத்தில் மதநல்லிணக்கமாக செயல்படும் ‘கங்கா யமுனா நாகரிகம்’ என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதாலும், சில வரலாற்று காரணங்களாலும் அடிக்கடி மதக்கலவரம் நிகழ்வது உண்டு. இதைத் தடுக்கும் வகையில் அவத் பகுதிவாசிகள் இடையே கங்கா யமுனா நாகரிகம் என்பதும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. இதற்கு முக்கிய உதாரணமாக ராஷீத் விளங்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x