Published : 02 Jul 2018 08:39 AM
Last Updated : 02 Jul 2018 08:39 AM
கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிக சக்தி வாய்ந்த அக்னி-5 ஏவுகணையை, விரைவில் ராணுவத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அக்னி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஒடிசா மாநில கடற்கரையோரம் நடத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது. இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. அத்துடன் அணு ஆயுதங்களையும் அக்னி-5 ஏவுகணை ஏந்திச் செல்லும் திறன் படைத்தது.
இந்த ஏவுகணை சீனா தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஸு, ஹாங்காங் போன்ற எந்த நகரத்தையும் தாக்கும் சக்தி படைத்தது. இதுகுறித்து போர் படை கமாண்ட் (எஸ்எப்சி) பிரிவு அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
அக்னி-5 ஏவுகணையை விரைவில் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டோம். ராணுவத்தில் ஏவுகணையைச் சேர்ப்பதற்கு முன்னர் சில சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அந்த சோதனைகள் அடுத்த சில வாரங்களில் நடத்தி முடிக்கப்படும். அதன்பின் இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டுவிட்டால், இந்திய ராணுவத்தின் பலம் பன்மடங்கு அதிகரித்துவிடும்.
அக்னி வரிசையில் அக்னி-5 மிக மிக அதிநவீனமானது. எதிரி இலக்கை கண்டறிந்து பாய்ந்து தாக்குவது, அணு ஆயுதங்களை சுமந்து செல்வதில் இந்த ஏவுகணை மிக சிறப்பானது. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எஸ்எப்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை அக்னி-5 ஏவுகணை 5 முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த 5 முறையும் சோதனை வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், வடகொரியா போன்ற சில நாடுகளிடமே உள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்த ஏவுகணையால் இந்தியாவின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும். அக்னி-2 ஏவுகணை 2000 கி.மீ., அக்னி-3 மற்றும் அக்னி-4 இரண்டும் 2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் திறன் படைத்தவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT