Published : 29 Jul 2018 08:54 AM
Last Updated : 29 Jul 2018 08:54 AM
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் நாயர் சர்வீஸ் சொசைட்டி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் கேரளத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
‘ஸ்த்ரீ’களின் (பெண்களின்) நாடு என கொண்டாடப்படும் மாநிலம் கேரளம். பத்து ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மாநிலம் இது. பெண்கள் அனைத்து துறைகளிலும் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும், நாட்டிலேயே அதிக பெண்கள் எழுத்
தறிவு பெற்ற மாநிலமாகவும் கேரளம் உள்ளது. ஆனால் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படாதது தொடர்பான சர்ச்சைகள் மற்றும் வழக்கு நடைமுறைகள் கேரளத்தில் பெண்களின் நிலையை எதிர்மறையாக பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
பொதுநல வழக்கு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாட்கள் கடும் விரதம் இருந்து ஆண்கள் சென்று வருகின்றனர். பெண்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், மாதவிடாய் காலம் முடிந்த 50 வயதை கடந்தவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இது நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. இதற்கிடையில் சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கோரி இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
எதிர்க்கும் தேவசம் போர்டு
கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ‘சபரிமலைக்கு பெண்கள் செல்ல தேவசம் போர்டு அனுமதிக்க வேண்டும்’ என்றே தொடக்கம் முதல் பேசிவந்தார். நேற்று அதிலிருந்து சற்று மாறுபட்டு, “உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறினாலும் அதை பின்பற்றுவோம்” என்றார்.
சபரிமலையை உள்ளடக்கிய திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக முன்னாள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மகுமார் நியமிக்கப்பட்டார். கமிட்டியில் இப்போது இடதுசாரி தலைவர்களே அதிகம் இருந்தாலும் பெண்களை அனுமதிப்பதில்லை என்பதில் கமிட்டி உறுதியாக உள்ளது.
சர்ச்சை பேச்சுகள்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதனால் இந்த வழக்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் சில மாதங்களுக்கு முன் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “அரச குடும்பத்து பெண்கள் தொடக்க காலங்களில் சபரிமலைக்குச் சென்றுள்ளனர்” என்று பேசியதும் சர்ச்சையானது. இதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்த டி.கே.ஏ.நாயர் 1940 காலக்கட்டத்தில் தன் அம்மாவின் மடியில் இருந்து பூஜைகளில் ஈடுபட்டதாக சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கெல்லாம் அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பராசரன் வாதம்
ஒட்டுமொத்த கேரளமுமே சபரிமலை வழக்கை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் முன்வைத்த வாதங்கள் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் சாரம்சம் இதுதான்:
“நன்கு படித்தவர்கள் நிறைந்த மாநிலம் கேரளம். இங்கு 96 சதவீத பெண்கள் படித்தவர்கள். சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள். சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படாததை ‘சதி’யோடு தொடர்புபடுத்தக்கூடாது. இந்து நம்பிக்கைக்கும் சதிக்கும் தொடர்பு கிடையாது. ஆணாதிக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதும் தவறு.
சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. அவர் தனித்துவம் வாய்ந்தவர். கடவுளே கோயிலுக்குள் இந்த வயதுடைய பெண்கள் வருவதை விரும்பவில்லை. பிறகு நாம் எப்படி அனுமதிக்க முடியும்? இந்து மதத்தில் சகிப்புத்தன்மை அதிகம். இங்கு பாலினப் பாகுபாடும் கிடையாது. இது கோயிலின் புனிதத்தன்மையை காப்பதற்காக தொன்றுதொட்டு வரும் நிகழ்வாகும். சபரிமலைக்கு ஆண்கள் தங்களது தாய், மகள், சகோதரி என எவரையும் அழைத்துவரும் உரிமை உள்ளது. ஆனால் வயதுதான் 50-க்கு அதிகமாகவும், பத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். விரத காலங்களில் பிரம்மச்சர்யம் மேற்கொள்ள வேண்டும்” என்ற பராசரன் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகள் 26(பி), 25(2), 17 ஆகியவற்றையும் மேற்கோள்காட்டி நீண்ட வாதம் செய்தார்.
“சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என ஒலிப்பது பாரம்பரியத்தின் குரல்கள். அரசியலமைப்பு சட்டம் 14-க்கு இணையாக ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்த அர்த்தநாதீஸ்வரராக சிவன் காட்சியளிக்கும் மதம் இந்து மதம். சிவன் பிரம்மச்சாரி அல்ல. அவர் யோகத்தில் இருந்தபோது நித்திரையை கலைத்த மன்மதனை எரித்தார். இதேபோல் இங்கு ஒவ்வொன்றும் ஆன்மிக ரீதியிலானவை” என மத நம்பிக்கைகளை முன்வைத்த அவரது வாதம் கேரளத்தில் வைரலாகி வருகிறது.
சாய்தீபக் வாதம்
இதைத்தொடர்ந்து மறுநாள் நடந்த விவாதங்களில் பந்தளம் அரச குடும்பத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து ‘பீப்பிள் பார் தர்மா’ அமைப்புக்காக வழக்கறிஞர் சாய்தீபக் ஆஜரானார். இவருக்கு முதலில் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்றும் மாதவிடாயை மையமாக வைத்து பெண்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டே தவறானது என்றும் இவர் பல்வேறு விவரங்களுடன் வாதங்களை முன்வைத்தார். இதில் வெகுவாக ஈர்க்கப்பட்டு சாய்தீபக்கை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக வாதிட நீதிபதிகள் அனுமதித்தனர்.
கோயில் மேல்சாந்தி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் வி.கிரி, “தனிப்பட்ட விருப்பத்துக்காக சாமி கும்பிடுபவர்களின் நம்பிக்கையையும், கடவுளின் தன்மையையும் சோதிக்கக் கூடாது” என வாதிட்டார். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களின் வாதத்திற்கு வரும் செவ்வாய்க்கிழமை மனுதாரரின் வாதம் முன்வைக்கப்பட உள்ளது.
கடையடைக்க அழைப்பு
இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் நோக்கத்தில் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுவதாகவும், அதனால் கோயிலின் புனிதத்தன்மை கெடும் அபாயம் உள்ளதாகவும் சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசைக் கண்டித்து வரும் 30-ம் தேதி கேரளத்தில் கடையடைப்பு நடத்தவும் இவை அழைப்பு விடுத்துள்ளன. கறுப்பு சட்டைகள் தென்படவில்லை…
சரண கோஷம் கேட்கும் சீசனும் இல்லை…தரிசனத்துக்கான மகரஜோதி காலமும் இது இல்லை. ஆனாலும் கேரளத்தின் பேசுபொருள் ஆகியுள்ளது சபரிமலை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT