Published : 09 Jul 2018 12:15 PM
Last Updated : 09 Jul 2018 12:15 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாக்பத் மாவட்ட சிறைச்சாலையில் தாதா ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இன்று காலை (திங்கள்கிழமை) நடந்துள்ளது. தீவிர விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
முன்னா பஜ்ரங்கி என்ற தாதா ஏற்கெனவே ஜான்சி மாவட்டத்தின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம்தான் (சனிக்கிழமை) பாக்பத் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டார். இங்கு இன்று காலை மிரட்டல் வழக்கு தொடர்பாக அவர் பாக்பத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி இருந்ததார். அதற்குள் சிறை வளாகத்துக்குள்ளேயே பஜ்ரங்கி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இப்படுகொலை சம்பந்தமாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆழமான விசாரணை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ''இப்படுகொலை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அதேநேரம் ஜெயிலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிறை வளாகததிற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது மிகவும் தீவிரமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. இது எப்படி நடந்ததென மிகவும் ஆழமான விசாரணை நடத்தப்படும். மேலும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மாநில போலீஸ் முன்னா பஜ்ரங்கியின் பெயரை என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் வைத்திருந்தததாக அவரது சீமா சிங் சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''என் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதைப் பற்றியும், போலி என்கவுன்டடரில் அவரைக் கொலை செய்ய ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதைப் பற்றியும் நான் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தெரிவிக்க விரும்பியிருந்தேன்'' என்று சீமா சிங் தெரிவித்தார்.
இவ்வழக்கை தொடர்பாக விசாரிக்க தற்போது ஒரு விசாரணைக்குழு பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT