Published : 05 Jul 2018 08:24 AM
Last Updated : 05 Jul 2018 08:24 AM
ஆந்திர மாநிலம், நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏ நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகை வாணி விஸ்வநாத்தை களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா. புத்தூர், நகரி ஆகிய 2 தொகுதிகளையும் இணைத்து கடந்த தேர்தலில் நகரி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடுவை எதிர்த்து 2014 தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நடிகை ரோஜா போட்டியிட்டார். இதில் 858 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் ரோஜா வெற்றி பெற்றாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார். இதற்கு பெண்களின் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடுவை மேலவை உறுப்பினராக சந்திரபாபு நாயுடு நியமித்தார். ஆனால் இவர் சில மாதங்களுக்கு முன் உடல் நலம் சரியின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில், 2019 சட்டப்பேரவை தேர்தலில் ரோஜாவை எதிர்த்து ஒரு நடிகையை களமிறக்க தெலுங்கு தேசம் முடிவு செய்தது. அதன்படி நடிகை வாணி விஸ்வநாத்தை தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் நகரிக்கு வந்த வாணி விஸ்வநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு அழைப்பின்பேரில், விரைவில் தான் தெலுங்கு தேசம் கட்சியில் இணையப்போவதாக அறிவித்தார். நகரி தொகுதியில் வாணி விஸ்வநாத்தையே களம் இறக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஒரு மூத்த நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார். ரோஜாவுக்கு நகரியில் உள்ள எதிர்ப்புகள், பெண்கள் ஆதரவு ஆகியவைகளை தெலுங்கு தேசம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தயாராகி வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் 2 நடிகைகள் போட்டி போட இருப்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT