Last Updated : 03 Jul, 2018 04:01 PM

 

Published : 03 Jul 2018 04:01 PM
Last Updated : 03 Jul 2018 04:01 PM

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி

 மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்வராஜ்யா எனும் ஆல்லைன் இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அதில் பிரதமர் மோடியிடம், எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பிரதமர் மோடி பதில் அளித்ததாவது:

''நான் எங்கு சென்றாலும் காரின் இருக்கையிலேயே அமர்ந்திருக்க முடியாது. சாலையில், தெருக்களில் நிற்கும் மக்களைப் பார்க்க வேண்டியது இருக்கும், அவர்களின் வாழ்த்துகளைப் பெற வேண்டியது இருக்கும். அவர்களைப் பார்த்து நான் பரவசத்தில் பேச வேண்டியது இருக்கும்.

நான் மிகப்பெரிய அரசனும் இல்லை அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரும் இல்லை. அப்படி இருந்தால்தான் மக்களின் அன்பும், அரவணைப்பும் இன்றி ஒதுங்கி இருக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் அல்ல. மக்கள்தான் எனக்கு வலிமையைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் அமரவைத்து இருக்கிறார்கள்'' என மோடி தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றச்சாட்டு கூறுகிறார்களே என்று பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது:

''பிஎப் புள்ளிவிவரங்கள்படி கடந்த ஆண்டு 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதில் தனியாக அமைப்பு சாராதுறைகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அறிக்கையின்படி, நாட்டில் ஏழ்மையின் அளவு குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லையென்றால் இவை சாத்தியமாகுமா?

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் சாலை அமைக்கும் அளவை இரட்டிப்பாக்கியுள்ளோம். இதன் மூலம் எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கிறதென்றால், வேலைவாய்ப்பு இல்லாமல் சாத்தியமா?  புதிய வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல், இத்தகைய வளர்ச்சியை எட்ட முடியுமா?

எதிர்க்கட்சிகள் எல்லாம் வேலையின்மை அதிகரித்துவிட்டதாகக் கூறுகின்றன. நான் கேட்கிறேன், கர்நாடக மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் கட்சி 53 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கியதாகத் தெரிவித்தது. மேற்கு வங்க அரசு 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கியதாகத் தெரிவித்தது.

மாநிலங்கள் அனைத்தும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருந்தால், நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற வாதம் பொருந்துமா? மாநில அரசுகள் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது ஆனால், அதை மத்திய அரசு வேலையின்மையை உருவாக்குகிறது என்பது சாத்தியமா?''

இவ்வாறு பிரதமர் மோடி பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x