Last Updated : 30 Jan, 2014 01:26 PM

 

Published : 30 Jan 2014 01:26 PM
Last Updated : 30 Jan 2014 01:26 PM

ராகுலின் பொருளாதார ஞானத்தை சிதம்பரம் விளக்குவாரா?- அருண் ஜெட்லி கேள்வி

காங்கிரஸ் கட்சியில் பிரதமராக்க முயலும் ராகுல் காந்தியின் பொருளாதார அறிவு மற்றும் திறமை பற்றி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து கூறுவாரா என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்தத் தலைவருமான அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொருளாதார அறிவு பற்றி விமர்சனம் செய்துள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பதிலடி தரும் வகையிலேயே அருண் ஜெட்லி இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அருண் ஜெட்லி விடுத்துள்ள அறிக்கையில், "முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், வாஜ்பாய் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் இல்லையென்றாலும், சிறந்த அரசியல் தலைவர்களாக இருந்ததுடன், பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தலைமைப் பண்பும், முடிவெடுக்கும் திறனும் கொண்டிருந்தனர்.

அவர்களால் பொருளாதாரப் பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியாவிட்டால், தங்களது எண்ணத்தை உறுதி செய்து விமர்சகர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். இந்தத் தன்மையால்தான் அவர்கள் இருவரும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

நரேந்திர மோடி தன்னை பொருளாதார வல்லுநர் என்று கூறிக் கொள்வதில்லை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்தை நிர்வகிப்பதில் தனது திறமையையும் முடிவெடுக்கும் தன்மையையும் நிலைநாட்டியுள்ளார். அதனால்தான் இன்று குஜராத், இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக உள்ளது.

அவருக்கு சிதம்பரம் போன்றவர்களின் சான்றிதழ் தேவையில்லை. சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் வெளியேறி மாற்றம் ஏற்பட்ட பின்னரே இந்தியாவில் முதலீடுகள் பெருகும் என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பிரதமராக்க முயலும் ராகுல் காந்தியின் பொருளாதார அறிவு மற்றும் திறமை பற்றி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து கூறுவாரா?" என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x