Published : 27 Jul 2018 02:30 PM
Last Updated : 27 Jul 2018 02:30 PM
கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டதற்குப் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுபவர்களே காரணம் என்று பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ குற்றம்சாட்டியுள்ளார்.
பசுக்களையும், மாடுகளையும் விற்பனைக்கும், வளர்க்கவும் எடுத்துச் செல்லும் வியாபாரிகளையும், அப்பாவிகளையும் சிலர் அடித்துக் கொல்லும் சம்பவம் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக நடந்து வருகிறது. சட்டத்தைக் கையில் எடுத்து இதுபோன்று அப்பாவிகளை அடித்துக் கொல்லும் சம்பவங்களைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் செய்யும் செயல்களால் மாட்டிறைச்சி பற்றாக்குறை தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று பாஜக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வர் மனோகர் பாரிக்கர் இருந்து வருகிறார். அங்கு இப்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
பேரவைக் கூட்டத்தில் நேற்று பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ பேசுகையில், “ பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு அலையும் ஒரு சில கும்பல்கள், கோவா மாநிலத்துக்குள் மாட்டிறைச்சியை கொண்டுவருவதைத் தடுக்கின்றனர். கோவா மாநில மக்களில் பெரும்பகுதியினரும், சுற்றுலாப்பயணிகளும் மாட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர்.
அப்படி இருக்கும் போது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சிலர் இதுபோன்று மாட்டிறைச்சியைத் தடை செய்வதால், மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
நான் பேசும் விதம் பலருக்கு பிடிக்கவில்லை. கர்நாடகா, மஹாராஷ்டிராவில் இருந்து மாட்டிறைச்சி கொண்டுவரக்கூடாது என்று அரசு விரும்பினால், கோவா மாநிலத்திலேயே அரசு சான்றிதழோடு மாட்டிறைச்சி விற்கும் விற்பனைக் கூடத்தை தொடங்க வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாட்டிறைச்சியைப் பசு பாதுகாவலர்கள் தடுப்பதால், கோவா மக்களின் உணவு உரிமை பறிக்கப்படுகிறது. நாம் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். மாட்டிறைச்சியைத் தடை செய்யக்கூடாது
இவ்வாறு மைக்கேல் லோபோ பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT