Published : 02 Jul 2018 05:16 PM
Last Updated : 02 Jul 2018 05:16 PM

புல்லட் ரயில் சாமானியர்களுக்கு அல்ல; 20 ஆண்டுகள் பின்தங்கிய இந்திய ரயில்வே: விளாசிய ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன்

பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான புல்லட் ரயிலால் பணக்காரர்கள்தான் பயன்பெறுவார்கள். மிக அதிகமான டிக்கெட் கட்டணம் கொண்ட அந்த ரயிலில் சாமானியர்கள் பயணிக்க முடியாது என்று மெட்ரோமேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மெட்ரோ ரயிலின் தரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக மத்தியஅரசு ஸ்ரீதரனை நியமித்து ஒரு வாரத்துக்குள் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்று மும்பை-ஆகமதாபாத் புல்லட் ரயில் திட்டமாகும். ஜப்பான் உதவியுடன் 1700 கோடி அமெரிக்க டாலரில் கட்டமைக்கப்பட உள்ள புல்லட் ரயில் 2022ம் ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், நாட்டில் 20லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்தியஅரசு நம்புகிறது.

இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மேலாளராகக் கடந்த 1995 முதல் 2012-ம் ஆண்டுவரை பணியாற்றிய மெட்ரோமேன் ஸ்ரீதரன் ஆங்கில நாளேடு ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் கேரள மெட்ரோ ரயில் திட்டமும் இவர் தலைமையில்தான் நடந்தது.

அந்த பேட்டியில் புல்லட் ரயில் திட்டம் இந்தியாவுக்கு இப்போது தேவையில்லை, சாமானிய மக்களுக்கான பாதுகாப்பான, வேகமான, குறைந்த கட்டண ரயில்சேவை அவசியம் என வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஜப்பான் நாட்டு அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரயில்திட்டம் பணக்காரர்களுக்கானது. அவர்கள் மட்டுமே அதிகக்கட்டணம் கொண்ட அந்த ரயிலில் பயணிக்க முடியும். சாமானிய மக்கள் புல்லட் ரயில் அப்பாற்பட்டது. நமது மக்களுக்குத் தேவை நவீனமயமாக்கப்பட்ட, பாதுகாப்பான, சுத்தமான, வேகமான ரயில்முறைதான்.

ரயில்வே துறை முன்னேறி இருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்கள். என்னைப் பொருத்தவரை ரயில்வே துறையில் வேகமான வளர்ச்சி, முன்னேற்றம் ஏதும் வரவில்லை. பயோ-டாய்லட் தவிரத் தொழில்நுட்ப ரீதியாக எந்த முன்னேற்றத்தையும் நான் பார்க்கவில்லை. வேகம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை.

மிகவும் பாரம்பரியம் கொண்ட ரயில்கள், அதிவேகம் என்று சொல்லப்படும் ரயில்களின் வேகம் கூட குறைந்துவிட்டது. ரயில்கள் நேரத்துக்கு வருவதில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குவருவதில் ரயில்வே துறை எதையும் பின்பற்றுவதில்லை. 70 சதவீதம் மட்டுமே நேரத்தைப் பின்பற்றுவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் 50 சதவீதமே நேரத்துக்குவருகிறது.

விபத்துக்கள் குறைப்பதிலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. ரயில்களில் அடிப்பட்டு மக்கள் உயிரிழப்பது, ரயில்வே இருப்புப்பாதையைக் கடக்கும் போது உயிரிழப்பது போன்றவை தொடர்ந்து நடக்கின்றன. ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்மோதி உயிரிழப்பவர்கள் ஆண்டுக்கு 20 ஆயிரத்தைத் தாண்டுகிறது. பல்வேறு வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்திய ரயில்வே 20 ஆண்டுகள் பின்தங்கித்தான் இருக்கிறது.

மெட்ரோ ரயில் சேவை தரமானதாகவும், அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மெட்ரோ ரயில் சேவையில் தரமும், திறனும் அதிகமாகும் போது செலவு கணிசமாகக் குறையும். உள்நாட்டிலேயே பெட்டிகளை தயாரிக்க முடியும்.

இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x