Published : 03 Jul 2018 11:23 AM
Last Updated : 03 Jul 2018 11:23 AM
மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் சிக்கிக் கொண்டனர். காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. டப்பா வாலாக்களும் இன்று சேவையை நிறுத்தி வைத்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே, மும்பையில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது நாடுமுழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மும்பையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 110 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்று காலையிலும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசாக தொடங்கிய மழை 8 மணிக்கு மேல் கனமழையாக மாறியது. டோம்ப்விலி, தானே, கட்கோபர், குர்லா, சியான் மற்றும் தாதர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்தேரி மேற்கு ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நடைபாதை வழியாக நடந்து செல்பவர்கள் ரயில் பாதையை கடக்க இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த பாலம் இடிந்து விழுந்ததால் அப்போது அந்த பலத்தில் சென்று கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். காயடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உடனடியாக அந்த பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. மேம்பாலம் இடிந்து விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் டப்பா வாலாக்கள் இன்று ஒருநாள் முழுவதும் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, மும்பை மழையில் இடிந்து விழுந்த நடை மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்கவும், ரயில் தண்டவாளங்களில் இடிபாடுகளை அகற்றி உடனடியாக ரயில் போக்குவரத்தை சரி செய்யவும் அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT