Published : 02 Jul 2018 04:24 PM
Last Updated : 02 Jul 2018 04:24 PM
அனைத்து மாநிலங்களிலும் ஜுலை 10-ம் தேதிக்குள் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கெடு முடிய இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு லோக்ஆயுக்தா மசோதாவைத் தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே லோக்ஆயுக்தா தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் லோக்பால் அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 10 நாட்களுக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட லோக்பால் சட்டப்படி, அனைத்து மாநிலங்களிலும் லோபால் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் இதுவரை லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை.
இது தொடர்பாக 2018, ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் வாதங்களை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஜுலை 10-ம் தேதிக்குள் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் லோக்பால் அமைப்பு அமைக்க வேண்டும் என்று கெடுவிதித்தது.
தமிழக அரசோ ஊழல் மற்றும் லஞ்சஒழிப்புத்துறை இருக்கும்போது, பிரதானச் சட்டத்தில் திருத்தம் செய்தாலே போதுமானது, லோக்பால் அவசியமா என்ற வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் லோக்பால் அமைப்பு அமைக்காமல் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தற்போது இருக்கும் ஊழல் மற்றும் லஞ்சஒழிப்புத்துறை மாநிலஅரசின் ஒரு அங்கமாகும், அதனால், பயனில்லை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி லோக்பால் அமைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த கெடு வரும் 10-ம் தேதியோடு முடிய இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. ஆதலால், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
இதற்கிடையே லோக்பால் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தும் அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொண்டு நிறுவனம் தொடர்ந்துள்ளது.
அந்தமனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர். பானுமதி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகினார். லோக்பால் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து உத்தரவுகள் வந்திருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரமாணப் பத்திரம்
இதையடுத்து லோக்பால் அமைப்பது தொடரப்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, இனிமேல் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து விளக்கமாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே லோக்பால் அமைப்பில் நீதிபதியை நியமிக்கும் தேர்வுக்குழுத் தலைவராக மூத்த வழக்கறிஞர் முகல் ரோகத்கியை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT