Published : 07 Jul 2018 09:50 PM
Last Updated : 07 Jul 2018 09:50 PM

ஆகஸ்ட் 12 - 16 வரை பாலாலய மஹா சம்ப்ரோஷணம் திருப்பதி கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்: தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி வேண்டுகோள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஆகஸ்ட்12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அஷ்ட பந்தன பாலாலய மஹா சம்ப்ரோஷணம் நடைபெற உள்ளதால், அந்த நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் ‘டயல் யுவர் இ.ஓ’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும், அஷ்ட பந்தன பாலாலய மஹா சம்ப்ரோஷணம் வரும் ஆகஸ்ட் 12 முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 5 நாட்களில் மிகவும் குறைந்த அளவிளான பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். எனவே, பக்தர்கள் இந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வருவதை தவிர்ப்பது நல்லது. ஜூலை 10 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக 4,000 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஜூலை 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுடன் கோயிலுக்கு வரும் பெற்றோருக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற இருப்பதால், அனைத்து பராமரிப்பு பணிகளையும் ஆகஸ்ட் 31-க்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 26-ம் தேதி மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

53,642 சேவா டிக்கெட்டுகள்

வரும் அக்டோபரில் ஏழுமலையானுக்கு நடைபெறும் பல்வேறு சேவைகளில் பங்கேற்க நேற்று 53,642 சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆன்லைன் குலுக்கல் முறையில் 9,742 டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதில் சுப்ரபாதம் 7,597, தோமாலை, அர்ச்சனை 90, அஷ்டதளம் 240, நிஜ பாதம் 1,725, விஷேச பூஜை 2,000, கல்யாண உற்சவம் 9,975, ஊஞ்சல் சேவை 3,150, ஆர்ஜித பிரம்மோற்சவம் 5,775, வசந்தோற்சவம் 11,000, சகஸ்ர தீப அலங்கார சேவை 12,000 என 53,642 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமும், ஆன்லைன் குலுக்கல் முறையிலும் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x