Published : 17 Jul 2018 03:00 PM
Last Updated : 17 Jul 2018 03:00 PM
ராகுல் காந்தி வெளிநாட்டுக்காரர், அவர் ஒருபோதும் இந்திய அரசியலில் சாதிக்க முடியாது எனப் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவரை கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடியாக இன்று நீக்கியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் சிங். இவர் லக்னோவில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், ‘‘ராகுல் காந்தி அவரின் தந்தை ராஜுவ் காந்தியைப் போன்று இருந்திருந்தால், அவர் இந்திய அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஆனால், ராகுல்காந்தி அவரின் தாய், வெளிநாட்டுக்காரரான சோனியாகாந்தியைப் போன்று இருக்கிறார். அவரின் உடலிலும் வெளிநாட்டு ரத்தமே ஓடுகிறது. ஆதலால், இந்திய அரசியலில் ராகுல் காந்தி ஒருபோதும் வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடிக்கு மாற்றாக அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் மாயாவதி தான்’’ என்று பேசினார்.
ஜெய் பிரகாஷ் சிங்கின் இந்தப் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, காங்கிரஸ் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெய் பிரகாஷ் சிங்கை கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எந்த ஒருஅரசியல் கட்சித் தலைவர் குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்குவதை கடுமையாக எதிர்க்கிறோம். அது எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தாலும் கூட அவ்வாறு பேசுவது தவறு என்பது கட்சியின் நிலைப்பாடும்.
ஆனால், ஜெய் பிரகாஷ் சிங்கின் பேச்சு குறித்து எனக்குத் தெரியவந்தது. இது பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையில் இருந்து நழுவிச் செல்லும் விதமான பேச்சாகும். இந்தக் கருத்து ஜெய்பிரகாஷின் கருத்தாக இருக்குமே தவிர கட்சியின் கருத்து அல்ல.
கட்சியின் எதிர்கால நலன் கருதி, இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஆதலால், கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஜெய் பிரகாஷ் சிங்கை அந்தப் பதவியில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிடுகிறேன். மேலும், தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும் ஜெய் பிரகாஷ் நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மாயாவதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT