Published : 27 Jul 2018 08:11 AM
Last Updated : 27 Jul 2018 08:11 AM

ஆந்திராவில் வன ஊழியர் கொலை: சேஷாசலம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு- தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆந்திர மாநிலம், கடப்பா வனப் பகுதியில் வன ஊழியர்களுக்கும், செம்மர கடத்தல் கும்பலுக்கும் நடந்த மோதலில், வன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அடிக்கடி நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் ஈடுபடுவதாக கூறுகின்றனர். அதற்கேற்ப செம்மரக் கடத்தல் கும்பல் மீது வனக்காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பலியான சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் கடப்பா மாவட்டம், சித்தப்பட்டினம், புக்கராய் வனப் பகுதியில் செம்மரம் வெட்டப்படு வதாக வந்த தகவலின்படி நேற்று முன்தினம் இரவு வன அதிகாரிகள் பிரசாத், சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 4 ஊழியர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து சென்றனர். அப்போது ரோலபோடு பகுதியில், எதிரே வந்த செம்மர கடத்தல் கும்பலை சரண் அடையும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்தக் கும்பல் கற்கள், கோடரிகளால் வன அதிகாரிகள், ஊழியர்களை தாக்கி யுள்ளனர். இவர்களும் பதிலுக்கு வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால் இந்த மோதலில் அஷோக் குமார் என்ற தற்காலிக வன ஊழியர் பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக கடப்பா மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய சுமார் 70 பேர் கொண்ட தமிழக செம்மர கடத்தல் கும்பலை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் சட்ட விரோதமாக செம்மரம் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பதி அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் சந்திரகிரி மண்டலம், சச்சினோடு பண்டா என்ற இடத்தில் நேற்று அதிகாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 25 பேர் கொண்ட செம்மர கடத்தல் கும்பல், இவர் களை கண்டதும் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கத் தொடங்கிய தாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே தப்பியோட முயன்ற கடத்தல் கும்பலை துரத்திச் சென்று 4 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 22 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார், ஏழுமலை, சேகர், மாணிக்கம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றவர்களையும் பிடிக்க வனப்பகுதியில் அதிரடிப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x