Last Updated : 19 Jul, 2018 02:38 PM

 

Published : 19 Jul 2018 02:38 PM
Last Updated : 19 Jul 2018 02:38 PM

லண்டன் டாக்டர் என ஏமாற்றி மும்பை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பாகிஸ்தான் இளைஞர்: காட்டிக்கொடுத்த ‘ஐடி கார்டு’

மும்பை

திருமணத்திற்கு வரன் தேடும் ‘மேட்ரிமோனியல்’ இணையதளத்தில் இந்தியர் என்று பொய்யான தகவலை அளித்து பாகிஸ்தானியர் ஒருவர் மும்பை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

மும்பையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றி வரும் பெண் ஒருவர் திருமணம் செய்வதற்காக வரன் தேடும் ‘மேட்ரிமோனியல்’ இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அவரது புகைப்படத்தையும், தகவல்களையும் பார்த்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பதில் அளித்துள்ளார்.

அதில், தானும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்த்தவர் என்றும், லண்டனில் தற்போது மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். விரைவில் இந்தியா வந்து திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் மொபைல்போன் மூலம் இருவரும் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த இளைஞர் நாக்பூர் என்று கூறிக்கொண்டாலும் அதுபற்றிய விவரங்கள் எதையும் தெரியாததால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது விவரங்களை வெளியே சொல்லாமல் மறைக்க முயன்றதுடன், தொடர்ந்து ஆபசமாக பேசியுள்ளார்.

இதனால், அந்த இளைஞர் பணி செய்வதாக கூறிய லண்டன் மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை இணையதளங்களில் தேடி தொடர்பு கொண்டுள்ளார் மும்பை பெண். அதுபோன்ற எந்த நபரும் அந்த மருத்துவமனையில் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள மும்பை பெண் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த இளைஞர் அனுப்பி வைத்த புகைப்படத்தில் அவரது அடையாள அட்டையில் ஒரு தொலைபேசி எண் இருந்துள்ளது. அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது அது பாகிஸ்தானில் இருப்பது தெரிய வந்தது. மேலும், அந்த எண்ணில் தொடர்பு கொண்ட நபர் பாகிஸ்தானில் இருப்பதாகவும், மும்பை பெண் தேடிய அந்த இளைஞரும் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்ற விவரத்தை கூறியுள்ளார்.

மேலும் அந்த இளைஞர் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். உண்மை தெரிந்ததும், மும்பை பெண் பாகிஸ்தானைச் சேர்ந்த ஏமாற்றிய நபருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

ஆனால் அவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்ய வேண்டும் எனவும், மறுத்தால் மும்பைக்கே வந்து கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மும்பை பெண் உள்ளூர் காவல் நிலைத்தில் தற்போது புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x