Published : 17 Jul 2018 12:19 PM
Last Updated : 17 Jul 2018 12:19 PM
சட்டத்தைக் கையில் எடுத்து, அப்பாவி மக்களையும், தலித், சிறுபான்மை மக்களையும் வன்முறை கும்பல், பசுக்குண்டர்கள் அடித்துக் கொல்வதைத் தடுக்க கடும் தண்டனைகளுடன் கூடிய, சிறப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை என்பது ‘கும்பலாட்சியின் பயங்கரமான செயலாகும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தைக் கையில் எடுத்து சிறுபான்மையினரையும், தலித் மக்களையும், மாடுகளை வியாபாரத்துக்குக் கொண்டு செல்பவர்களையும் தாக்கிக் கொலை செய்யும் சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்தது.
இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் கோரி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைக் கடந்த ஆண்டு விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவா ராய், ஏ.எம். கான்வில்கர் அடங்கிய அமர்வு பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் டிஎஸ்பி அந்தஸ்துக்குக் குறைவில்லாமல் பசு குண்டர்கள் வன்முறையைத் தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை எத்தனை மாநிலங்கள் பின்பற்றி இருக்கின்றன, அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநில அரசுகள் மட்டும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த மாநிலங்கள் மீது தெஹ்சீன் பூணாவாலா என்ற சமூக ஆர்வலர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், அந்த மனு கடந்த 3-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏஎம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாநில அரசுகளை கடுமையாகச் சாடினார்கள், விரைவில் அதற்குரிய அதிகாரிகளை நியமிக்கும்படியும், அப்பாவிகளை அடித்துக்கொள்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் உத்தரவிட்டு தங்களின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
சட்டத்தை கையில் எடுத்து ஒரு சிலரும், கும்பலும் அப்பாவி மக்களையும், தலித் மக்களையும், சிறுபான்மையினரையும் தாக்கி கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கும்பலாட்சியின் மிகப் பயங்கரமான செயல்களாகும்.
ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், சமூகத்தின் பன்முகத்தன்மை குலையாமல் பாதுகாப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் கடமையாகும். பசுக்குண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படாதவாறு கட்டுப்படுத்துவதும் அவசியமாகும்.
பசுக் குண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து தலித், சிறுபான்மையினரையும், அப்பாவிகளையும் அடித்துக் கொல்வதைத் தடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். இந்தச் சட்டம் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த குற்றத்தைச் செய்பவர்கள் அச்சப்படும் வகையில் தண்டனையும், பிரிவுகளும் இருக்க வேண்டும்.
சமூகத்தின் கண்முன், மக்களின் முன் பசுக்குண்டர்கள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்களை பார்த்துக்கொண்டும் சாமானிய மக்கள் வேடிக்கை பார்ப்பது சட்டத்தின் ஆட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நாங்கள் அளிக்கும் இந்தத் தீர்ப்பு சமூக கட்டமைப்பை உருக்கலையாமல் வலிமைப்படுத்தும் ஒரு தெளிவான அழைப்பு மணியாகக் கருதி அரசு இதைச் செயல்படுத்த வேண்டும்.
சட்டத்தைக் கையில் எடுத்து ஒருவரும் செயல்படாத வகையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். பசுக்குண்டர்கள் வன்முறையைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
பசுக்குண்டர்கள் மூலம் நடக்கும் வன்முறையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளன, திட்டங்கள் வகுத்துள்ளன ஆகியவற்றைத் தொகுத்து அடுத்த 4 வாரங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வன்முறை கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு இழப்பீடு தொகை என்பது மதம், சாதி, சமூகம், பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கக்கூடாது. அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் தன்மை, பாதிப்பின் அளவுஆகியவற்றின் அடிப்படையில் வழங்க வேண்டும். இதுபோன்ற பசுக்குண்டர்கள் செயல்கள் நாட்டின் எந்த மூலையிலும் நடப்பதற்கு வாய்ப்புளிக்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT