Published : 16 Jul 2018 03:24 PM
Last Updated : 16 Jul 2018 03:24 PM
வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து புகழ்ந்து கொண்டிருந்தால், அவரையே மேக் இன் இந்தியா திட்டத்துக்கும், ஸ்டார்ட்அப் இந்தியா பிரச்சாரத்துக்கும் பயன்படுத்துங்கள் என்று பாஜகவைக் கிண்டல் செய்துள்ளது சிவசேனா கட்சி.
ஹைதராபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பழங்குடியினருக்கான தொழில்முனைவோர் மாநாடு நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் பங்கேற்றுப் பேசுகையில், ''அனைத்துப் பழங்குடியின மக்களும் விஜய் மல்லையாவின் பாதையைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவர் வங்கியில் கடன் பெற்று, பெரிய தொழிலதிபர் ஆனாரோ அதேபோன்று செயல்பட வேண்டும். அனைவரும் விஜய் மல்லையாவைக் குறை சொல்கிறார்கள்.
உண்மையில் விஜய் மல்லையா மிகவும் ஸ்மார்ட் ஆனவர். ஏராளமான மக்களுக்கு வேலை கொடுத்தவர். அவர் கடனைக் கட்டவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவரால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பலர் பயன்பெற்றுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
அதன்பின் எதிர்க்கட்சிகளிடம் இருந்தும், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து தன்னுடைய பேச்சுக்கு ஜுவல் ஓரம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்
இந்நிலையில், ஜுவல் ஓரம் பேசிய பேச்சைக் குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் கிண்டல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
''பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகிறார், ஊழலை ஒழிப்பேன் என்று கூறி வருகிறார். ஆனால், அவரின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும், எம்.பி.க்களும் விஜய் மல்லையாவைப் புகழ்கிறார்கள். கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுத் தப்பி ஓடிய தொழிலதிபர்களை தங்கள் நாயகர்களாக நினைத்துப் புகழ்கிறார்கள்.
பொது இடங்களில் பேசும் போது பாஜகவினரும், எம்.பி., எம்எல்ஏக்களும் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அப்படி இருந்தும், பாஜகவினர் நாவடக்கம் இல்லாமல் பேசி வருகிறன்றனர். பொதுமக்களிடம் பேசுகிறோம் என்ற சிந்தனையின்றி பேசுகிறார்கள். இப்படியே சென்றால், மும்பை குண்டுவெடிப்பு முக்கியக் குற்றவாளி தாவுத் இப்ராஹிம் நல்லவர், எந்தக் குற்றமும் செய்யாதவர் என பாஜக தலைவர்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள்.
மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் பேசியது உண்மையில் பாஜகவின் கருத்துதான் என்பது மக்கள் மனதில் பதிந்துவிடும். முஸ்லிம்கள் குறித்து ராகுல் காந்தி, சசி தரூர் பேசியதைச் சுட்டிக்காட்டிய பாஜகவினர் தங்கள் கட்சியின் புதிய தூதர் விஜய் மல்லையா குறித்தும் பேச வேண்டும். வளர்ச்சிக்கு வித்தியாசமான விஷயத்தை ஓரம் வழங்கி இருக்கிறார். இவரின் பேச்சு மக்களை முட்டாளுக்கும் விதத்தில் இருக்கிறது.
விஜய் மல்லையா மிகவும் ஸ்மார்ட் ஆனவர் என்று பாஜகவினர் கருதினால், ஏன் கடின உழைப்பு மீதும், சேமிப்பு மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டத்துக்கு விஜய் மல்லையாவை தூதுரக மத்திய அரசு நியமிக்கலாம்.''
இவ்வாறு சிவசேனா கட்சி காட்டமாகத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT