Published : 15 Apr 2025 06:51 PM
Last Updated : 15 Apr 2025 06:51 PM
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். "தற்போதைய அரசு தரப்பு புகார் ஏப்ரல் 25 அன்று இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது அமலாக்க இயக்குநரகம் மற்றும் விசாரணை அதிகாரியின் சிறப்பு வழக்கறிஞர், நீதிமன்ற பரிசீலனைக்காக வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குவார்" என்று நீதிபதி விஷால் கோக்னே கூறினார். இந்தக் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை: முன்னதாக, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக கடந்த 11-ம் தேதி அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) டெல்லி ஐஒடியில் உள்ள ஹெரால்ட் ஹவுஸ், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள வளாகம் மற்றும் லக்னோவின் பிஷேஸ்வர்நாத் சாலையில் உள்ள ஏஜேஎல் கட்டிடம் ஆகிய மூன்று இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நோட்டீஸில், டெல்லி மற்றும் லக்னோ வளாகங்களை காலி செய்யுமாறும், மும்பையில் உள்ள சொத்தின் வாடகையை அமலாக்கத் துறைக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
வழக்கின் பின்னணி: கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு, ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது.
அந்தச் சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. மீதமுள்ள ரூ.89.50 கோடி கடனை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment