Published : 14 Apr 2025 01:12 PM
Last Updated : 14 Apr 2025 01:12 PM
புதுடெல்லி: அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்க காரணம் ‘வாக்கு வங்கி’ அரசியல்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காங்கிரஸை வாக்கு வங்கி வைரஸ் தாக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கரின் சமூக நீதியை தங்களது சுய லாபத்துக்காக காங்கிரஸ் கட்சி குலைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹரியானாவில் ஹிசார் விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், “ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கான அஸ்திரமாக புனிதமான அரசியலமைப்பை பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆட்சி அமைக்க முடியாது என உணர்ந்த போதெல்லாம் அதை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.
இந்திய சமூகத்தில் சமத்துவத்தை அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஏழை எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவரும் கண்ணியத்துடனும், தலை நிமிர்ந்தும் வாழ வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தார் அம்பேத்கர். ஆனால், காங்கிரஸ் கட்சி அதை குலைத்தது.
இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள், பட்டியல் பழங்குடியின மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களை நாட்டின் 2-ம் தர குடிமக்களாகவே காங்கிரஸ் கட்சி கருதியது. அந்த கட்சியின் தலைவர்கள் நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். அதே நேரத்தில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு குறித்து கண்டும் காணாமல் இருந்தனர்.
ஏழைகள் நலன் மற்றும் சமூக நீதியை உறுதி செய்ய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வக்பு வாரியம் வசம் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. உண்மையாகவே அந்த சொத்துகளின் சலுகைகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், நிச்சயம் அது அவர்களுக்கு பயன் தந்திருக்கும். ஆனால், நில மாஃபியாக்கள் தான் இந்த சொத்துக்களால் பயனடைந்தனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...