Published : 13 Apr 2025 12:43 PM
Last Updated : 13 Apr 2025 12:43 PM
புதுடெல்லி: இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இமயமலை நகரம் முதல் மத்திய ஆசியாவின் நகரம் வரையில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை குலுங்கச் செய்த இந்த நிலநடுக்கங்கள், அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளன.
மண்டியில் நிலநடுக்கம்: முதல் நிலநடுக்கம் இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் காலை 9 மணிக்கு உணரப்பட்டது. பூமியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. மிகச் சிறியதாக இது தெரிந்தாலும், குடியிருப்பாளர்கள் உணரும் அளவுக்கு நிலநடுக்கம் வலுவானதாக இருந்துள்ளது. இதுவரை உயிரிழப்பு, காயம் மற்றும் சேதங்கள் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை.
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் : இதற்கு சிறிது நேரத்துக்கு பின்பு மத்திய மியான்மரின் மெய்க்டிலா அருகே 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கும் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28ம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பில் சுமார் 3,600 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த பூகம்பத்துக்கு பின்பு ஏற்பட்ட நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதே.
மார்ச் பூகம்பத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத மாண்டலே மற்றும் நேபிடோ நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த புதிய நிலநடுக்கம் சற்று வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகள், கட்டிடத்தை விட்டு வெளியேறினார். இரண்டு கூடியிருப்புகளின் கூரைகள் தேசமடைந்தன. இந்த நிலநடுக்கத்தால் புதிய உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் முந்தை பாதிப்புகளால் திணறி வரும் நாட்டில் இந்த புதிய நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஜிகிஸ்தானில் இரண்டு நிலநடுக்கங்கள்: அதேபோல் தஜிகிஸ்தானில் காலை 9.54 மணிக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவானது. அருகில் உள்ள நகரங்களில் உள்ள மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கடைகள் மற்றும் பள்ளிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காலை 10.36 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. 3.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment