Published : 13 Apr 2025 11:50 AM
Last Updated : 13 Apr 2025 11:50 AM

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் திட்டம்?

புதுடெல்லி: ​மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் மீது குடியரசுத் தலை​வர் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த 8-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு திட்டவட்டமான காலக்கெடுவை நிர்ணயிக்கும் தீர்ப்புக்கு எதிராக ஒரு மனு தயாரிக்கப்பட்டு வருகிறது என ஒரு மூத்த அரசு அதிகாரி தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அரசு அதிகாரி, இந்த வழக்கில் வாதங்கள் நடைபெற்றபோது மத்திய அரசின் கருத்துக்கள் போதுமான அளவு முன்வைக்கப்படாததால் மறுஆய்வு அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.

தமிழக அரசின் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதை எதிர்த்​தும், மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க கால​வரம்பு நிர்​ணயம் செய்ய கோரி​யும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் கடந்த 2023-ம் ஆண்​டில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் அமர்வு கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்​கியது.

‘‘தமிழக அரசின் 10 மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் அவற்றை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் பரிந்​துரை செய்​தது சட்ட​ விரோதம். அந்த 10 மசோ​தாக்​களும் ஆளுநருக்கு அனுப்​பப்​பட்​ட​போதே சட்​ட​மாகி அமலுக்கு வந்​து​விட்டன என்று உச்ச நீதி​மன்​றத்​தின் தனிப்​பட்ட அதி​காரத்தை பயன்​படுத்தி அறிவிக்​கிறோம். தன்​னிச்​சை​யாக செயல்​பட்டு அவற்றை தடை செய்​வதற்​கான ‘வீட்​டோ’ அதி​காரமோ, நிறைவேற்ற விடா​மல் தடுப்​ப​தற்​கான ‘பாக்​கெட் வீட்டோ’ அதி​காரமோ ஆளுருக்கு கிடை​யாது. மாநில அமைச்​சர​வை​யின் ஆலோ​சனை​ப்​படி நடக்க அவர் கடமைப்​பட்​ட​வர். மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்​துக்​குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்​டும்.

மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் விவ​காரத்​தில் குடியரசுத் தலை​வருக்கு ‘வீட்​டோ’ அதி​காரமோ, ‘பாக்​கெட் வீட்​டோ’ அதி​காரமோ கிடை​யாது. மசோதா தொடர்பான குடியரசுத் தலை​வரின் முடிவு நீதி​மன்ற ஆய்​வுக்கு உட்​பட்​டது. அரசி​யல் சாசன பிரிவு 201-ன்​படி, ஒரு மாநில சட்​டப்​பேர​வை​யில் மசோதா நிறைவேற்​றப்​பட்​டால், அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்​பப்பட வேண்​டும். அதை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் அனுப்பி வைக்​கலாம். மாநில ஆளுநர்​கள் அனுப்​பும் மசோ​தாக்​கள் குறித்து 3 மாதங்​களுக்​குள் குடியரசுத் தலை​வர் முடிவு எடுக்க வேண்​டும். ஒரு​வேளை தாமதம் ஏற்​பட்​டால், அதற்​கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்​டும்.

ஒரு மசோ​தாவை மறுஆய்வு செய்ய அல்​லது திருத்​தம் செய்ய கோரி சட்​டப்​பேர​வைக்கு குடியரசுத் தலை​வர் திருப்பி அனுப்​பலாம். சட்​டப்​பேர​வை​யில் அந்த மசோ​தா மீண்​டும் நிறைவேற்​றப்​பட்டு குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைக்​கப்​படும்​போது, மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்​கப்பட வேண்​டும். மாநில அரசுகளின் மசோ​தாக்​களை தொடர்ச்​சி​யாக திருப்பி அனுப்ப கூடாது. மாநில அரசின் மசோ​தா, அரசி​யல் சாசனத்​துக்கு எதி​ராக இருக்​கும் பட்​சத்​தில், குடியரசுத் தலை​வர் சட்ட ஆலோ​சனை​களை கேட்​கலாம்.

அதே​போல, மசோ​தாக்​கள் விவ​காரத்​தில் மாநில அரசுகள் முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். குடியரசுத் தலை​வரின் கேள்வி​களுக்கு மாநில அரசுகள் உரிய பதில்​கள், விளக்​கங்​களை அளிக்க வேண்​டும். நாட்​டின் முதல் குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத் காலத்​தில் நிகழ்ந்த சம்​பவத்தை சுட்​டிக் காட்ட விரும்​பு​கிறோம். இந்து சட்ட மசோதா விவ​காரத்​தில் அப்​போதைய குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத் பல்​வேறு ஆட்​சேபங்​களை எழுப்​பி​னார். இதுதொடர்​பாக அன்​றைய அட்​டர்னி ஜெனரல் எம்​.சி.சீதல்​வாட்​டின் ஆலோ​சனையை அவர் கோரி​னார். அப்​போது தெளி​வாக விளக்​கம் அளித்த சீதல்​வாட், ‘‘மத்​திய அமைச்​சர​வை​யின் ஆலோ​சனைப்​படியே குடியரசுத் தலை​வர் செயல்பட வேண்​டும். இது​தான் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் விதி’’ என்று உறு​திபட தெரி​வித்​தார். இதை குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத்​தும் ஏற்​றுக் கொண்​டார். இதன்​மூலம் பிரதமர் - குடியரசுத் தலை​வர் இடையே ஏற்​பட்ட பிரச்​சினைக்கு சுமுக தீர்வு காணப்​பட்​டது.

அரசி​யலமைப்பு சட்​டத்தை காப்​பாற்ற அனை​வரும் உறு​தி​யேற்று செயல்பட வேண்​டும். குறிப்​பாக, அரசின் உயர் பதவி​களை வகிப்​பவர்​கள் அரசி​யலமைப்பு சட்​டத்​தின்​படிமட்​டுமே நடக்க வேண்​டும். மாநில அரசின் நல்ல நண்​ப​ராக, ஆலோ​சக​ராக, வழி​காட்​டி​யாக ஆளுநர் செயல்பட வேண்​டும். மக்​களின் நலனை மட்​டுமே முன்​னிறுத்த வேண்​டும். பதவி​யேற்​கும்​போது எடுத்த உறு​தி​மொழிகளை கண்​டிப்​புடன் பின்​பற்ற வேண்​டும். மாநில மக்​களின் நலனுக்​காக ஆளுநரும், மாநில அரசும் இணக்​க​மாக செயல்பட வேண்​டும். இவ்​வாறு தீர்ப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சட்ட நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘வழக்கு விசா​ரணை​யின்​போது, மசோதா குறித்து முடி​வெடுக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு காலக்​கெடு நிர்​ண​யம் செய்ய கூடாது என்று மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் வா​திட்​டார். ஆனால், அவரது கருத்தை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் நிராகரித்​துள்​ளனர். நாட்​டின் வரலாற்​றில் முதல்​முறை​யாக, மசோ​தா குறித்​து முடிவு எடுக்​க கால நிர்​ண​யம்​ செய்​யப்​பட்​டுள்​ளது’’என்​று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x