Published : 09 Apr 2025 07:58 AM
Last Updated : 09 Apr 2025 07:58 AM
புதுடெல்லி: பிரிட்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான எம்பர், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத எரி சக்தி உற்பத்தி குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன்படி எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் 215 நாடுகளின் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு சர்வதேச அளவிலான மின் உற்பத்தியில் 41 சதவீத மின்சாரம் அணு சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. இதன்படி சர்வதேச அளவில் நீர்மின் நிலையங்கள் மூலம் 14%, அணு சக்தி மூலம் 9%, காற்றாலைகள் மூலம் 8%, சூரிய மின் கட்டமைப்புகள் மூலம் 7%, இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 3% மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சர்வதேச அளவிலான காற்று, சூரிய மின் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவின் மொத்த உற்பத்தியில் 82 சதவீத மின்சாரம், காற்றாலை, சூரிய மின் கட்டமைப்புகள், நீர் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த நாட்டில் நிலக்கரி மூலம் 18% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவிலான காற்று, சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 78% நிலக்கரி உள்ளிட்ட புதைபடிமங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 22% காற்றாலைகள், சூரிய மின் கட்டமைப்புகள், அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...