Published : 07 Apr 2025 05:21 AM
Last Updated : 07 Apr 2025 05:21 AM
கொச்சி: கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்து, குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூர தண்டனைகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சில ஊழியர்களை கழுத்தில் சங்கிலியால் கட்டி இழுத்து, நாய்களை போன்று நடக்க வைத்திருப்பது வீடியோ மூலம் தெரியவந்திருக்கிறது. நாய் போன்று குரைக்க வேண்டும், தரையில் தூசியை நக்க வேண்டும் என்பன போன்ற கொடூர தண்டனைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கேரள தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாத ஊதியம், சிறப்பு படிகள் வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஏராளமான இளம்பெண்கள், இளைஞர்களை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பணியில் சேர்த்து இருக்கிறது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை.
அதோடு நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. குறைவாக வசூல் செய்த ஊழியர்கள் அடிமைகளை போன்று நடத்தப்பட்டு உள்ளனர். அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் இரு இளைஞர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக நாய் போன்று நடக்க வேண்டும். குரங்கு போன்று தாவ வேண்டும் என்பன போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு உள்ளன. சில ஊழியர்களின் ஆடைகளும் களையப்பட்டு உள்ளன. இவ்வாறு கேரள தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் தெரவித்துள்ளன.
இதுகுறித்து கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறும்போது, “சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகினறனர். மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார். போலீஸார், தொழிலாளர் நலத்துறை அளிக்கும் அறிக்கைகளின்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மாநில மணித உரிமைகள் ஆணையம், மாநில இளைஞர் நலத் துறை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
போலி வீடியோ: பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவர் கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் மேலாளராக பதவி வகித்த நபர் அண்மையில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் சில பொய்யான வீடியோக்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவை கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோக்கள். என்னை யாரும் அவமதிக்கவில்லை. எங்களது நிறுவனத்தில் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...