Published : 07 Apr 2025 06:30 AM
Last Updated : 07 Apr 2025 06:30 AM
புதுடெல்லி: வரும் அக்டோபர் முதல் 2027 ஏப்ரல் வரை, பிஹார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், குஜராத் மற்றும் இமாச்சல் ஆகிய 7 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய வக்பு சட்ட திருத்த மசோதா சட்டமாகி உள்ளது.
இதன் பலன் பாஜக.வுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது திடீரென வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்தியில் உள்ள பாஜக அரசு நிறைவேற்றி விட்டது. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு லாபத்தை விட இழப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. எனினும், இது இந்துமத வாக்குகளை ஒன்றிணைப்பதுடன், முஸ்லிம்களின் சில பிரிவுகள் மற்றும் முஸ்லிம் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் அக்டோபரில் பிஹாரில் நடைபெற உள்ள தேர்தலில் இது உண்மையா என்று தெரிந்து விடும். பிஹாரில் 20 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். இவர்கள் லாலு தலைமையிலான மெகா கூட்டணி மற்றும் நிதிஷ்குமார் தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என இருதரப்பிலும் உள்ளனர்.
இவற்றில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பிஹாரின் சீமாஞ்சல் பகுதியில் சற்று செல்வாக்குடன் உள்ளது. வக்பு சட்டத்துக்கு நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்ததால், பிஹார் முஸ்லிம்களின் வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்து தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 25 சதவீத முஸ்லிம்கள் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு சட்டம் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. பெரும்பாலான முஸ்லிம்கள் முதல்வர் மம்தாவுக்கு ஆதரவளிக்கின்றனர். அதேநேரத்தில் இந்து வாக்குகளால் பாஜகவுக்கும் ஆதரவு அதிகரிக்கும். இதனால், மம்தாவின் திரிணமூல் கட்சிக்கும் பாஜக.வுக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9 சதவீத முஸ்லிம்களில் திமுக, அதிமுக என இரண்டு கூட்டணிகளுக்குமே ஆதரவு தெரிவிக்கின்றனர். எனினும், வரும் தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால், முஸ்லிம் வாக்குகளை அதிமுக இழக்கும். அதை உறுதிப்படுத்தவே வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுக்க தயாராகி வருகிறது.
வரும் 2027-ம் ஆண்டு உ.பி., உத்தராகண்ட் தேர்தலிலும் வக்பு சட்டத்தால், முஸ்லிம் வாக்குகள் பாஜகவுக்கு மேலும் குறையும் சூழல் உருவாகிறது. கடைசியாக வரும் குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தலில் பாஜக மீதான முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடரும் என்றே கருதப்படுகிறது. முத்தலாக் தடை சட்டத்தை போலவே பெண்கள் மற்றும் ஏழை முஸ்லிம்கள் பயனடைவார்கள் என்று வக்பு சட்டம் குறித்து பாஜக கூறிவருகிறது. இதனால், முஸ்லிம் வாக்காளர்கள் பிளவுபடவில்லை என்றாலும், இந்து வாக்காளர்கள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...