Published : 06 Apr 2025 10:55 PM
Last Updated : 06 Apr 2025 10:55 PM
சம உரிமை, மதச்சார்பின்மையை உறுதி செய்ய, நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் பொது சிவில் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உயிரிழந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் உடன் பிறந்தவர்களுக்கும் அந்தப் பெண்ணின் கணவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ஹன்சதே சஞ்சீவ் குமார் விசாரித்து வருகிறார். அவர் கூறியதாவது:
தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் மதம் தொடர்பாக நம் நாட்டுக்கு ஒரே சீரான பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. அப்போதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின் நோக்கம் நிறைவேறும்.
நாடு முழுவதும் உள்ள பெண்கள் அரசியல் சாசனத்தின் கீழ் சமமான குடிமக்களாக இருந்தாலும், மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள் காரணமாக அவர்கள் சமமற்ற வகையில் நடத்தப்படுகிறார்கள்
குறிப்பாக, இந்து சட்டத்தில் மூதாதையர் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம் தனிநபர் சட்டமானது சொத்துகளை பங்கிட்டுக் கொள்வதில் சகோதர, சகோதரிகளுக்கிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக சகோதரிக்கு குறைவான பங்கு வழங்க வகை செய்கிறது.
இந்த பாகுபாட்டை களைய உத்தராகண்ட் மற்றும் கோவா மாநில அரசுகள் ஏற்கெனவே பொது சிவில் சட்டத்தை இயற்றி அமல்படுத்தி உள்ளன. இதன் அடிப்படையில், நாடாளுமன்றமும் மாநில சட்டப்பேரவையும் பொது சிவில் சட்டம் இயற்றுவதற்கான நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் வல்லபபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், டி.கிருஷ்ணமாச்சாரி மற்றும் மவுலானா ஹஸ்ரத் மொஹானி உள்ளிட்டோர் பொது சிவில் சட்டம் அவசியம் என வலியுறுத்தினர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment