Published : 05 Apr 2025 04:57 PM
Last Updated : 05 Apr 2025 04:57 PM

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி நேரில் வலியுறுத்தல்

கொழும்பு: மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இன்று அவர் கொழும்புவில், அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "இன்று நாங்கள் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினோம். மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க ஒப்புக்கொண்டுள்ளோம். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சமரசம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

இலங்கை அரசு, தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்றும், அரசியலமைப்பினை நிறைவேற்றும் திசையில் செயல்படும் என்றும், கவுன்சில் தேர்தல் குறித்த அவர்களின் உறுதிமொழிகளை பூர்த்தி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுக்கு 10,000 வீடுகள் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.

உண்மையான நண்பன் மற்றும் நட்பை விட எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு தரும் கேடயம் வேறொன்று இருக்க முடியாது என்று தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதிபர் அனுர குமார திசநாயக்க தனது பயணத்துக்கான முதல் வெளிநாடாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார். இன்று அவர் பதவியேற்ற பின்பு இலங்கைக்கு முதல் வெளிநாட்டு பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன். நமது நட்பின் சிறப்பினையும் ஆழத்தையும் இது வெளிப்படுத்துகிறது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்பதிலும், சாகர் திட்டத்திலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு.

நான் இலங்கைக்கு வருவது இது நான்காவது முறை. கடந்த முறை மிக முக்கியமான காலகட்டத்தில் நான் இலங்கைக்கு வந்தேன். அப்போது இலங்கை மீண்டெழும், வலிமையாக மீண்டெழும் என்று நான் நம்பினேன். இன்று இலங்கை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையான நண்பனாக நாங்கள் இலங்கையுடன் நின்றது எங்களுக்கு பெருமையளிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலோ, கரோனா பெருந்தொற்றோ அல்லது சமீபத்திய பொருளாதார நெருக்கடியோ நாங்கள் இலங்கை மக்களுடன் துணையாக நின்றிருக்கிறோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்த பிரதமர் மோடி: இலங்கையின் உயரிய விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளிட்டுள்ள பதிவில், "இன்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவால் இலங்கை மித்ர விபூஷண விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இது எனக்கான தனிப்பட்ட மரியாதை இல்லை. 140 கோடி இந்திய மக்களுக்கான பெருமை. இந்த மரியாதை, இரு நாடுகளுக்கு இடையே வேரூன்றிய ஆழமான நட்பு மற்றும் வரலாற்று உறவுகளையே குறிக்கிறது. இந்த மரியாதைக்காக இலங்கை அதிபர், அரசு மற்றும் இலங்கை மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x