Published : 03 Apr 2025 04:39 AM
Last Updated : 03 Apr 2025 04:39 AM
புதுடெல்லி: உ.பி.யில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துவந்த 8 வயது சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த மார்ச் 21-ம் தேதி சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது ஒரு குடிசைக்கு அருகில் இருந்த கொட்டகை தீப்பற்றியதை தொடர்ந்து, அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமி தனது தாயிடம் இருந்து தன்னை விடுவிடுத்துக் கொண்டு குடிசைக்குள் ஓடினாள். பிறகு இந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதப் புத்தகங்களை கொண்ட ஸ்கூல் பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு நேற்று ஒரு வழக்கு விசாரணையில் இந்த வீடியோ ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தது.
இதுகுறித்து நீதிபதி புயான் கூறுகையில், “சமீபத்தில் புல்டோசர்களால் சிறிய குடிசைகள் இடிக்கப்படும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இடிக்கப்பட்ட ஒரு குடிசையிலிருந்து ஒரு சிறுமி கையில் புத்தகங்களுடன் ஓடி வருவது ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என்றார்.
அனன்யா யாதவ் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கிறார். அனன்யா கூறுகையில், "எனது புத்தகங்களும் பையும் எரிந்துவிடுமோ என்று பயந்தேன். உடனே ஓடிச் சென்று அதை எடுத்துக் கொண்டு என் அம்மாவிடம் திரும்பினேன்” என்றார்.
50 ஆண்டுகளாக தங்கள் குடும்பம் பயன்படுத்தி வரும் 2,700 சதுர அடி நிலத்துக்காக அதில் இருந்த குடிசைகளை அதிகாரிகள் இடித்துவிட்டதாக சிறுமியின் தாத்தா ராம் மிலன் யாதவ் புகார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...