Published : 03 Apr 2025 04:15 AM
Last Updated : 03 Apr 2025 04:15 AM
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு வருமான வரி துறை ரூ.34 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மாத வருமானம் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
சொற்ப வருமானம் ஈட்டும் தொழிலாளர்களுக்கு வருமான வரித் துறை கோடிக் கணக்கில் வரி செலுத்தக் கோரி தவறுதலாக நோட்டீஸ் அனுப்பி பேரதிர்ச்சி கொடுக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
அந்த வகையில் அண்மையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார்க்கில் ஜூஸ் கடை நடத்தி வரும் நபருக்கு ரூ.7.5 கோடி வரி செலுத்த கோரி வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியது பேசுபொருளானது.
இந்த நிலையில், ஆக்ராவைச் சேர்ந்த கரன் குமார் என்பவருக்கும் ரூ.34 கோடி வரி செலுத்த கோரி வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஊடகங்களின் மூலம் தெரியவந்துள்ளது. தூய்மைப் பணியாளரான இவர் மாதம் 15 ஆயிரம் மட்டுமே சம்பாதித்து வருகிறார்.
மார்ச் 22-ம் தேதியிடப்பட்ட அந்த வருமான வரி துறை நோட்டீஸில் " கரன் குமாரின் வருமான வரி தாக்கல் படிவங்களை ஆய்வு செய்ததில் அவர் 2019-20-ல் 33 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 368 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். எனவே, வருமான வரியாக அவர் ரூ.34 கோடி செலுத்த வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரண்குமார் கூறுகையில், “ ஆக்ராவின் கைர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் தூய்மைப் பணியாளராக 2021 முதல் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறேன். எனது மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே. படிக்காதவன் என்பதால் எனக்கு வந்த நோட்டீஸ் குறித்து எதுவும் தெரியாது. ஆனால், மற்றொருவர் மூலமாக அதுகுறித்து அறிந்து கொண்டபோது எனது தலையில் பேரிடி விழுந்தது போல் இருந்தது. வருமான வரி துறை நோட்டீஸ் குறித்து சந்தாஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன்" என்றார்.
கரண் குமாரின் பான் கார்டை பயன்படுத்தி ஒரு சிலர் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment