Published : 01 Apr 2025 01:29 AM
Last Updated : 01 Apr 2025 01:29 AM
புதுடெல்லி: கடலோர பகுதிகளில் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கடலோர பகுதிகளில் சுரங்கம் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்யாமல் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டதற்கு கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
கடலோர பகுதியில் சுரங்கம் அமைப்பதால் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் கடலோர பகுதி மக்களின் மாறுபட்ட வாழ்க்கை முறையை மீட்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தும். எனவே, இந்த டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மீனவர்களின் வாழ்க்கை கடலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, கடலோர பகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன்பு மீனவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment