Published : 31 Mar 2025 06:01 PM
Last Updated : 31 Mar 2025 06:01 PM

பிரதமர் மோடியின் தனிச் செயலர் - யார் இந்த நிதி திவாரி?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரியான நிதி திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (மார்ச் 29) வெளியிடப்பட்ட உத்தரவில், பிரதமரின் தனிச் செயலராக நிதி திவாரி நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திவாரியின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

யார் இந்த நிதி திவாரி? - உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் உள்ள மெஹ்முர்கஞ்சைச் சேர்ந்தவர் நிதி திவாரி. பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி இது. ஐஎஃப்எஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வாரணாசியில் உதவி ஆணையராக (வணிக வரி) பணியாற்றிக்கொண்டிருந்த நிதி திவாரி, 2013-ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் 96-வது இடத்தைப் பிடித்தார்.

கடந்த 2022 நவம்பரில் பிரதமர் அலுவலகத்தில் உதவிச் செயலராக நிதி திவாரி சேர்ந்தார். பின்னர் ஜனவரி 2023-இல் துணைச் செயலாளராக (Deputy Secretary) பதவி உயர்வு பெற்றார். இந்தப் பொறுப்பில் அவர் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய இலாகாக்களைக் கையாண்டார்.

பிரதமர் அலுவலக பதவிக் காலம் முடிவதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியமர்த்தப்பட்டார். அங்கு ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலின் கீழ் 'வெளியுறவு மற்றும் பாதுகாப்பு' பிரிவில் பணியாற்றிய நிதி திவாரி, சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்றார்.

ராஜஸ்தான் மாநிலம் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிடுவதோடு, வெளியுறவு, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட மூலோபாய கொள்கை துறைகளிலும் நிதி திவாரி ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமையின்போது அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x